| அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை Dinamalar
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:04

உடுமலை:உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில், இரண்டு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக, மேற்கு தொடர்ச்சிமலையிலுள்ள, மூணாறு, தலையாறு, மறையூர், பெரியவாரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பாம்பாறும், கிழக்கு பகுதியிலிருந்து தேனாறும், மேற்கு பகுதி மலைகளில் பெய்யும் மழை நீர், சின்னாறு வழியாகவும் அணைக்கு வருகிறது.கடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், அணை நீர்மட்டம் சரிந்து, கடந்த நான்கு மாதமாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்தாண்டு, குளிர்கால மழை மற்றும் கோடை மழை ஏமாற்றியதால், அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 25 அடியாக காணப்பட்டது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கி, தீவிரமடைந்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து, கடந்த ஒரு வாரத்தில், இரண்டு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


நேற்று காலை நிலவரப்படி, நீர்மட்டம், 29.27 அடியாகவும், நீர் இருப்பு, 380.27 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 77 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரு நாட்களாக கன மழை பெய்து வருவதால், நீர் வரத்து மேலும் அதிகரித்தது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' கடந்த ஆண்டு, கோடை மழை நல்ல முறையில் பெய்ததோடு, தென்மேற்கு பருவ மழையும் முன்னதாக துவங்கியதால், ஜூன் மாதம், 65 அடி வரை நீர் மட்டம் இருந்தது. இந்தாண்டு, கடந்த, 10 நாட்களாக, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்தால், படிப்படியாக நீர் வரத்து அதிகரிக்கும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X