| பழங்குடியினருக்கு 'டிரைவிங் லைசென்ஸ்!' கிராமத்துக்கே சென்று அதிகாரிகள் அசத்தல் Dinamalar
பழங்குடியினருக்கு 'டிரைவிங் லைசென்ஸ்!' கிராமத்துக்கே சென்று அதிகாரிகள் அசத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:20

ஆனைமலை:பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து துறையினர், பழைய சர்க்கார்பதி கிராமத்துக்கு நேரடியாக சென்று, 56 பேருக்கு 'லைசென்ஸ்' வழங்கினர்.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆனைமலை அடுத்த சர்க்கார்பதி, டாப்சிலிப் பழங்குடியினர் செட்டிமென்ட் பகுதிகளில், டிச., மாதம் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.


'லைசென்ஸ்' எடுக்கும் வழிமுறைகள்; லைசென்ஸ் எடுப்பதால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், விபத்து காப்பீட்டின் நன்மைகள் உள்ளிட்டவை குறித்து பழங்குடியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், டிச., இறுதியில் முகாம் நடத்தி, டாப்சிலிப்பில், 12 பேருக்கு, பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) வழங்கினர். சேத்துமடையில் முகாம் நடத்தி சர்க்கார்பதி பழங்குடியினர், 72 பேருக்கு எல்.எல்.ஆர்., வழங்கினர்.இந்நிலையில், எல்.எல்.ஆர்., பெற்றுக்கொண்டதில் 'லைசென்ஸ்' பெற தகுதியான பழங்குடியினருக்கு, பழைய சர்க்கார்பதி அரசு துவக்கப்பள்ளியில், வட்டார போக்குவரத்து துறையினர் 'லைசென்ஸ்' வழங்கினர்.இதில், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.,) சிவகுருநாதன், போக்குவரத்து ஆய்வாளர்கள் முனுசாமி, செல்வதீபா, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், முதற்கட்டமாக, 56 பேருக்கு மோட்டார் சைக்கிள், மற்றும் இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டது. பழங்குடியினர் மகிழ்ச்சியுடன் லைசென்ஸ் பெற்றுக்கொண்டனர்.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கூறியதாவது:பழங்குடியின மக்கள் பெரும்பாலானவர்கள் லைசென்ஸ் பெறுவது, காப்பீட்டின் நன்மை உள்ளிட்டவை குறித்து தெரிவதில்லை.


இவர்களில் பெரும்பாலானவர்கள் லைசென்ஸ் எடுக்காமல் உள்ளனர். லைசென்ஸ் எடுத்தால் வனத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் 'ஆக்டிங் டிரைவர்' உள்பட வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் முகாம் நடத்தி, லைசென்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, டாப்சிலிப்பில் பத்து பேருக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர், வனத்துறையினர் டிரைவராக பணியாற்றுகின்றனர். இதேபோல், மற்ற பழங்குடியின கிராமங்களிலும் முகாம் நடத்தப்பட்டு, லைசென்ஸ் வழங்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X