சூலுார்:சூலுார் விமானப்படைத்தளத்தினுள், அத்துமீறி நுழைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சூலுார், திருச்சி சாலையில் விமானப்படைத்தளம் உள்ளது. உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள இத்தளத்தில், பாதுகாப்பு படையினர், 24 மணி நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் மதியம் தளத்தின் கிழக்குப்பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அப்போது, ஓடுதளத்துக்கு அடுத்துள்ள சுற்றுச்சுவர் அருகே நின்றிருந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அந்த வாலிபர், மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த முருகன் மகன் பார்த்திபன், 22 என்பது தெரிந்தது.காரணம்பேட்டையில் உள்ள, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், மது போதையில், அத்துமீறி விமானப்படைத்தளத்தினுள் நுழைந்தது தெரிந்தது. தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட பாதுகாப்பு படையின் உதவி பாதுகாப்பு அதிகாரி சிங், அந்த வாலிபரை சூலுார் போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தார். சூலுார் போலீசார், பார்த்திபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.