கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியில், விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க, அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த புகளூரில் இருந்து, கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு பவர் கிரிட் பவர் ஹவுஸ் வரை, உயர் மின் கோபுரங்கள் அமைக்க, பவர் கிரிட் நிறுவனம் அளவீடு செய்யும் பணி மேற்கொண்டு வருகிறது.
விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நேற்று காலை கருமத்தம்பட்டி, செம்மாண்டம்பாளையம் பகுதிகளில் அளவீட்டு பணி மேற்கொள்ள பவர் கிரிட் அதிகாரிகள் வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் தங்கராஜ், தங்கவேல், பழனிச்சாமி உள்ளிட்ட ஒன்பது விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், செம்மாண்டாம்பாளையத்தில், துரைசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதானம் பேசியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.விவசாயிகள் கூறுகையில்,'விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைப்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் உள்ளது போல், கேபிள் பதித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்றனர்.