பந்தலுார்,:நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் மழை பெய்து வருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. அதில், கூடலுார்-தேவர்சோலை-சுல்தான்பத்தேரி சாலையில், முக்கட்டி அருகே, 13வது மைல் பகுதியில் நேற்று அதிகாலை, சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. மின் கம்பங்களும் உடைந்தன.இந்த வழியாக செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும், முக்கட்டி, உப்பட்டி, பந்தலுார் வழியாக திருப்பி விடப்பட்டன.
காலை, 6:00 மணிக்கு மின்வாரியத்தினர், பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.இதேபோல, உப்பட்டி-பெருங்கரை-கொளப்பள்ளி சாலையில், 2 கற்பூர மரங்கள் நேற்று காலை, அடியோடு சாய்ந்து, தங்கம்மாள் என்பவரின் வீட்டு கூரை மீது விழுந்தது. வீட்டினுள் உறங்கி கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, மின்சப்ளையை துண்டித்தனர்.வி.ஏ.ஓ. செந்தில் ஆய்வு செய்தார். மதியம் மற்றொரு மரம் விழுந்து, அங்கிருந்த வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. மழை சேதம் குறித்த கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.