விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில், தீ தடுப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
செஞ்சி பைபாஸ் சாலையில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., திருமால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தீயணைப்புத் துறை மாவட்ட அதிகாரி பாஸ்கரன், உதவி அதிகாரி முகுந்தன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயசங்கர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர், தீப்பிடித்தால் எவ்வாறு விரைவாக அணைப்பது என்பது குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்து, விளக்கம் அளித்தனர்.புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு, தீயணைப்புத் துறை அதிகாரிகள் செயல்விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ரமேஷ், முதல்வர் புவனா உட்பட பலர் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சிஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட முகாமிற்கு தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி அலுவலர் முகுந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தீத்தடுப்பு முன்னணி வீரர்கள் பேரிடர் மேலாண்மை குறித்த செயல்விளக்க பயிற்சி அளித்தனர். பாதிக்கப்பட்டவர்களை உயர்மட்ட கட்டங்களிலிருந்து பாதுகாப்பாக மீட்பது, தீவிபத்து ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள், தீவிபத்துக்காலங்களில் தீயிலிருந்து தப்புவது, தீயினை அணைப்பது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், உதவி தலைமை ஆசிரியர்கள் கலாபன், மணிமொழி, உடற்கல்வி ஆசிரியர் வாசு பங்கேற்றனர்.