| 'ஸ்மார்ட்' திருப்பூர்: மாயம் அல்ல... மந்திரம் அல்ல... நிஜம் : ரூ.2,570 கோடியில் திட்டங்கள்: சர்வதேச தரத்தில் கட்டமைப்பு Dinamalar
'ஸ்மார்ட்' திருப்பூர்: மாயம் அல்ல... மந்திரம் அல்ல... நிஜம் : ரூ.2,570 கோடியில் திட்டங்கள்: சர்வதேச தரத்தில் கட்டமைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
08:25

'ஸ்மார்ட்'டாக இருந்தால், யாருக்குத் தான் பிடிக்காது! மனிதர்கள் என்றில்லாமல், லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் மாநகரங்களும், மிடுக்காய் இருந்தால், எவ்வளவு அற்புதமாய் இருக்கும்...! 'இதெல்லாம் நம்மூர்ல சாத்தியமே இல்லீங்க...,' என்று அடித்துச் சொல்பவர்கள் ஆயிரம் பேர் என்றால், 'ஏன், நம்ம ஊரை ஸ்மார்ட்டா மாற்ற முடியாதா?' என்று நம்பிக்கையுடன் சொல்பவர்கள், ஆயிரத்தில் ஒருவர்தான். மோடி அரசு, 2015ல், இந்தக் கனவை மெய்ப்பட வைக்க, 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தை அறிவித்தது!


நாடு முழுவதும் 100 நகரங்கள், இதற்கென தேர்வு செய்யப்பட்டன. சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை, நகரங்களில் உருவாக்குவதே, இதன் நோக்கம். தமிழகத்தில், 12 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், மூன்றாம் சுற்றில் அறிவிக்கப்பட்டதுதான், திருப்பூர் மாநகராட்சி. மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'திருப்பூரில், 1,875 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இங்குள்ள, தொழில்துறையினர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து வந்து பார்த்தால், திருப்பூர் நகரமே 'குட்டி ஜப்பான்' போல மாறியிருக்கும். திருப்பூருக்குத்தான் வந்தோமோ; வேறு நாட்டுக்கு வந்தோமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு, 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் சிறப்பாக நடக்கும். திருப்பூர் எழுச்சிமிகு மாநகரமாக மாறியிருக்கும்...'கடந்த பிப்., 28ம் தேதி, திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டி, பேசிய, முதல்வர் பழனிசாமி குறிப்பிட்ட விஷயங்கள் இவை.


ரூ.2,570 கோடி திட்டம்
திருப்பூர் மாநகராட்சிக்கு 2 ஆயிரத்து, 570 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குடிநீர் வினியோகம் மேம்பாடு செய்தல், பயன்பாட்டில் உள்ள இரு பஸ் ஸ்டாண்ட்டுகள் மேம்படுத்துதல், மார்க்கெட் பகுதிகளை மேம்பாடு செய்தல், பல அடுக்கு வாகன பார்க்கிங் வசதி, நவீன கூட்டரங்கம் அமைத்தல், நொய்யல் ஆறு புனரமைப்பு செய்தல், பூங்காக்கள் புனரமைத்தல், சாலை வசதி மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள், இதில் அடக்கம்.இத்திட்டம், பகுதி வளர்ச்சி மேம்பாடு, முழுமையான நகர மேம்பாடு என, இரு பிரிவாக திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டமாக, ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக பகுதி வளர்ச்சி மேம்பாடு என்ற அடிப்படையில், 750 கோடி ரூபாய் மதிப்பில், மொத்தம் 26 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..


'பூங்கா'வனம்
தொழில் நகரான, திருப்பூர் உழைப்புக்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் பெற்றது. இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களுக்கு பொழுது போக்கு என்பது சினிமாவைத் தவிர வேறு எதுவுமில்லை. துாய காற்றை சுவாசித்து, விடுமுறை நாட்களில் பூங்கா போன்ற இடங்கள் சென்று வர பலரும் விரும்புவர். இதற்கென மாநகராட்சியின் வெள்ளி விழா பூங்கா ஒன்று மட்டுமே உள்ளது. இது தவிர, வார்டு வாரியாக குடியிருப்பு பகுதிகளில் சிறிய அளவிலான பூங்காக்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3.86 கோடி ரூபாய் மதிப்பில், ராயபுரம் ரவுண்டானா, கிருஷ்ணன் கோவில் அருகேயுள்ள பூங்கா, புது நகர் காலனி பூங்கா மற்றும் ஜே.ஜி., நகர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு பூங்காக்கள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இவற்றில் பொழுது போக்கு அம்சங்கள், விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீருற்று, யோகா மையம், நடைப் பயிற்சி மேடை மற்றும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.


புத்தம்புது ரோடுகள்
நகரில் உள்ள அகலம் அதிகமுள்ள ரோடுகள் தேர்வு செய்யப்பட்டு அதில் புது ரோடு அமைக்கப்படும். அதில், பாதாள சாக்கடை, கம்பி வடங்கள் அமைக்க தனி வசதி, நடை பாதை, சாலை குறியீடு, வேக தடுப்பு, நிழற்குடை, தெரு விளக்கு உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். அவ்வகையில் மொத்தம் 14 கி.மீ., ரோடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், 150 கோடி ரூபாய் மதிப்பில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படும்.நகரில் உள்ள அனைத்து ரோடுகளில், ரோடுகளின் பெயர், பகுதி பெயர், வழிகாட்டி அறிவிப்பு, சாலை விவரங்கள் குறித்த குறியீடுகள் உள்ளிட்டவை 16.33 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்படும்.


மெகா வடிகால்கள்
மழையின் போது, மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வகையில் 12 வார்டுகளில், 40 கோடி ரூபாய் மதிப்பில், பெரிய அளவிலான மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படஉள்ளது.


மதிப்பு பெறும் மார்க்கெட்கள்
தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட், 2 கோடி ரூபாய் செலவில், கான்கிரீட் கூரை கொண்ட 28 கடைகள்; கழிவு தொட்டி, கழிப்பிட வசதி ஆகியவற்றுடன் புனரமைப்பு செய்யப்படுகிறது. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் 4.5 கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டப்படுகிறது. இதில் 86 கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.தென்னம்பாளையம் சந்தை 13 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இங்கு 187 கடைகள், கான்கிரீட் கூரையுடன் அமையவுள்ளது. சந்தைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தவும் வசதி செய்யப்படும். இதில், 30க்கும் மேற்பட்ட லாரிகள், 150க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும், 80 க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும்.பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள தினசரி மார்க்கெட் 29 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும். இரு தளங்களில் முதல் தளத்தில் 222 கடைகள், முதல் தளத்தில், 174 கடைகள் அமைகின்றன. மேலும் 200க்கும் மேற்பட்ட பைக்குகள், 85 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, பொதுக்கழிப்பிடம் ஆகியன அமைகின்றன. கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும்.


சோலார் மின்சாரம் ஜொலிக்கும்
இடுவாய் பகுதியில், 27 கோடி ரூபாய் மதிப்பில், சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். இதன் மூலம் 4.8 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். மாநகராட்சியின் 7.8 மெகாவாட் மின் தேவை இதில் சமாளிக்கப்படும்.மாநகராட்சிக்குச் சொந்தமான 81 கட்டடங்கள்; 51 பள்ளிகள், ஆறு நீர் ஏற்று மையங்கள், சமுதாய கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் 2.34 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தினமும் 1380 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யப்படும்.திருப்பூர் முழுவதும் 17 கோடி ரூபாய் செலவில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்படும். மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட டியூப் லைட்கள், எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள 11 நகரங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் 30 கோடி ரூபாய் செலவில் அமைகிறது.


குப்பைகள் உரமாகும்
நகரில் உள்ள மக்கும் குப்பைகள் மூலம் நுண் உரம் தயாரிக்க, 22 கோடி ரூபாய் மதிப்பில் 16 இடங்களில், திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கப்படும். இதன் மூலம் உரம் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும்.


முன்னுரிமை தரப்படுமா!

'ஸ்மார்ட்' சிட்டி முதல் கட்டப்பணிகள், வேகப்படுத்தப்படுகிறது. முதல் கட்டப்பணிகள் என்பது குறைவானதே. அடுத்தடுத்த கட்டங்களில்தான் ஏராளமான பணிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ஏற்றுமதி இலக்குடன் செயல்படும் திருப்பூரில், 'ஸ்மார்ட்' சிட்டி திட்டம் விரைவில் முழுமை பெறச் செய்ய வேண்டும்!.பிற நகரங்களைக் காட்டிலும், திருப்பூருக்கு இதில், மத்திய அரசு முன்னுரிமை தர வேண்டும்!


'காணி நிலத்தினிடையே
-ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்''காணி நிலம் வேண்டும் -- - பராசக்திகாணி நிலம் வேண்டும் - - அங்குதுாணில் அழகியதாய் -- நன்மாடங்கள்துய்ய நிறத்தினதாய் -- அந்தக்காணி நிலத்தினிடையே -- ஓர்மாளிகைகட்டித் தரவேண்டும் -- அங்கு கேணியருகினிலே -- தென்னைமரம்கீற்று மிளநீரும்'ஒரு தனி மனிதனின் கனவாக, மகாகவி பாரதியின் கவிதைத்தெறிப்பு இது. அவனது கனவு, நனவானது, பல நேரங்களில். அதுபோல், சமூகத்தின் கனவாக, 'ஸ்மார்ட் சிட்டி'யைக் கருதலாம். கடக்கும் பாதை, இன்னும் வெகுதுாரம்.


முன்னுரிமைக்கு வாய்ப்பு
60 சதவீதம் - பின்னலாடை தொழில்களுக்கு40 சதவீதம் சேவை, பிற தொழில் நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களுக்குஉடனடி அனுமதி


என்னென்ன மேம்படும்?
* கல்வி
* வேலைவாய்ப்பு
* குடிநீர்
* மின் வசதி
* கழிவுநீர் மேலாண்மை
* ஆரோக்கியம்
* இயற்கை வளப் பாதுகாப்பு
* மின் சிக்கனம்
* சேவை மையங்கள்
* வர்த்தகக் கட்டமைப்பு
* பொருளாதாரக் கட்டமைப்பு
* முதலீடு ஈர்ப்பு


எது எதில் சர்வதேச தரம்?
* வை பை இணைப்பு
* பாதாள சாக்கடை
* தெரு விளக்குகள்
* பார்க்கிங்
* நடைபாதைகள்
* இணைப்பு சாலை வசதி


82 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
மாநகராட்சியில் உள்ள 82 ஆயிரம் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். ஏறத்தாழ 29 கோடி ரூபாய் மதிப்பில் சீரான குடிநீர் சப்ளைக்கு உரிய ஏற்பாடு செய்யப்படும்.


இனி, நொய்யல் மீது மையல் கொள்ளலாம்
நகரின் மையமாக அமைந்துள்ள நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் திட்டம்; ஆற்றின் கரைகளில் நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு வசதி 157 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.


'மாளிகை' டவுன் ஹால்

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள டவுன் ஹால் அரங்கம் முற்றிலும் இடித்து அகற்றி விட்டு புதிய அரங்கம் 52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது. இது கீழ் தளம், தரை தளம், முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் என அமைக்கப்படுகிறது. கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் வசதி; தரை தளத்தில் பொருட்காட்சி அரங்கு மற்றும் உணவு அரங்கு ஆகியனவும், முதல் தளம் பல்நோக்கு அரங்கு, உணவு அரங்கு ஆகியனவும் இரண்டாம் தளத்தில் இதே வசதிகளும், பாங்கட் ஹால் கூடுதலாகவும் அமைகிறது. அரங்கில் சாய்வு நடை தளம் மற்றும் லிப்ட் வசதி ஏற்படுத்தப்படும்.


நவீன பஸ் ஸ்டாண்ட்டுகள்
திருப்பூரில் காமராஜ் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட், பி.என். ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் என இரு பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்களும், பல்லாயிரம் பயணிகளும் வந்து செல்கின்றனர். 'ஏ' கிரேடு பெற்ற இந்த பஸ் ஸ்டாண்ட் 5.64 ஏக்கர் பரப்பில் உள்ளது. கடந்த 1982ல் கட்டிய இந்த பஸ் ஸ்டாண்ட் பின்னர் 1986 மற்றும் 1993ம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.இதில் தற்போது, 36.50 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளது. 100 கடைகள், 45 பஸ்கள் நிற்கும் ரேக்குகள்; மின்சார பஸ்கள் சார்ஜ் செய்யும் வசதி; ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஸ்டாண்ட், பஸ் ஊழியர் ஓய்வறை உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.அதே போல் புது பஸ் ஸ்டாண்ட் 29.79 கோடி ரூபாய் மதிப்பில், இரு தளங்களுடன் 44 கடைகள் கொண்ட வணிக வளாகம்; கீழ் தளத்தில் கார் மற்றும் பைக் ஸ்டாண்டும், ஆட்டோ ஸ்டாண்ட் தனியாகவும் இதில் அமையவுள்ளது.


பல அடுக்கு பார்க்கிங்
திருப்பூர் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பிரச்னையாக இருப்பது வாகன பார்க்கிங். இதற்கு தீர்வு காணும் வகையில் நகரில் இரு முக்கிய இடங்களில் பல அடுக்கு முறையில் நவீன வாகன பார்க்கிங் அமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
காமராஜ் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகே, 18.17 கோடி தரை தளம் மற்றும் நான்கு தளங்களில் 2000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில், இரு லிப்ட், தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்படும். இது தவிர குமரன் ரோட்டில் டவுன்ஹால் அருகே, தரை மற்றும் மூன்று தளங்களுடன் 12 கோடி ரூபாய் மதிப்பில் வாகன பார்க்கிங் அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இதில் ஏறத்தாழ 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்களும், 500 கார்களும் நிறுத்தும் வகையில், லிப்ட் மற்றும் சாய்வு தள வசதியுடன் அமைகிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X