| டிக் டாக் விபரீதம்: இளம்பெண் உயிரிழப்பு Dinamalar
டிக் டாக் விபரீதம்: இளம்பெண் உயிரிழப்பு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

12 ஜூன்
2019
14:05
பதிவு செய்த நாள்
ஜூன் 12,2019 14:03


பெரம்பலூர்: டிக் டாக் செயலியில் மூழ்கி கிடந்ததை கணவர் கண்டித்ததால், இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.






அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனிவேலு என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.




இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர். பழனிவேலு, சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். தனது மொபைல்போனில், டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார்.




குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கொடுக்காமல், டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார்.அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார்.







இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகள் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார். தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார்.




இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்தார். வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடித்துள்ளார், இதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.




மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று(ஜூன்11) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X