கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, விவசாயிகள் 'மினி டிராக்டர்' மூலம் நிலங்களை உழுது வருகின்றனர்.
நீலகிரியில் நீராதாரம் உள்ள விளை நிலங்களில் கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. தவிர கீரை வகைகளையும் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு, மழை இல்லாமல் வெறுமனே விடப்பட்டிருந்த விளை நிலங்களை உழுது சமன் செய்வதற்கு ஏதுவாக, கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நிலங்களில் உழவு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் விதைப்பு பணியை மேற்கொள்ள ஏதுவாக, கூடுதலாக கூலி வழங்க விவசாயிகள் முன்வந்தாலும், தொழிலாளர்களை பிடிப்பது அரிதாக உள்ளது. இதனால், மினி டிராக்டர்களை வாடகைக்கு அமர்த்தி, நிலங்களை உழுது சமன் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு கூடுதல் தொகை செலவானாலும், தொழிலாளர்கள் மூலம், ஐந்து நாட்களில் செய்ய வேண்டிய வேலையை, சில மணி நேரங்களிலேயே செய்து முடிக்க முடியும். இதனால், ஒரே நேரத்தில் டிராக்டர்களை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டிராக்டர் உரிமையாளர்கள் 'பிசி'யுடன் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.