கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் வரத்து அதிகரித்துள்ளதால், கொள்முதல் நிலையங்களில், பசுந்தேயிலை தேங்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம், தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளது. இத்தொழிலை நம்பி, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த, ஓராண்டுக்கு மேலாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைத்து வருகிறது.
இடுபொருட்களின் விலை உயர்வு, தோட்ட பராமரிப்பு செலவு உள்ளிட்ட செலவீனங்களை ஒப்பிடுகையில், தற்போது கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும், கடந்த காலங்களில் கிடைத்து வந்த விலையை ஒப்பிடுகையில், விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், காய்ந்து கிடந்த தோட்டங்களில், ஈரப்பதம் அதிகரித்து பசுந்தேயிலை மகசூல் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இனிவரும் நாட்களில் மழை தொடரும் பட்சத்தில், மகசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பசுந்தேயிலை பறிக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறித்த நேரத்தில் பசுந்தேயிலை பறிக்காத பட்சத்தில், இலைகள் முதிர்ந்து, கரட்டு இலையாக மாற வாய்ப்புள்ளது.இதனால், தொழிலாளர்கள் 'ஓவர் டைம்' மூலம், கூடுதல் கூலியில் பசுந்தேயிலை பறித்து வருகின்றனர்.
பசுந்தேயிலை தோட்டத்திலேயே முதிர்ந்து கரட்டு இலையாகாமல் தவிர்க்க, 'கிலோ காசு' என்ற அடிப்படையில், பசுந்தேயிலை பறித்து வருகின்றனர். இதனால், தனியார் கொள்முதல் மையங்களில் பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது.