கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஜெயக்குமார் வரவேற்றார்.கூட்டத்தில், பொள்ளாச்சி எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ஜெயராமன் கலந்து கொண்டார்.
குளத்துப்பாளையம் ஊராட்சியில், 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி, 74 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா எம்.ஜி.ஆர்., நுாற்றுாண்டு விழாவின் போது வழங்கப்பட்டது.பட்டா மட்டுமே பெற்றுள்ள பயனாளிகளுக்கு, இடம் அளந்து ஒப்படைப்பு செய்யவில்லை. இதனால், பயனாளிகள் வீடு கட்ட முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, வருவாய்துறை அலுவலகத்திற்கு வந்து பலமுறை மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டதுக்கு வந்த பயனாளிகள், துணை சபாநாயகரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவின் மீது உடனடியாக, கிணத்துக்கடவு சர்வேயர் நடவடிக்கை எடுத்து, இடத்தை அளந்து பயனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும், என, அறிவுறுத்தினார்.மேலும், முதியோர் உதவி தொகை கேட்டும், நிழற்கூரை, பழுதடைந்த மின் கம்பம் மாற்றியமைப்பது, கோவில்பாளையத்தில் சிறு பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய வேண்டுவது என பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, துணை சபாநாயகர் அறிவுறுத்தினார்.