ஆனைமலை;ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடர் வனத்துக்கு திரும்பியுள்ளன.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைகள் அதிகம் உள்ளன. அவைகள், வனத்திலுள்ள மரங்களில் உதிரும் இலைகள், பழங்கள், மூங்கில், ஊஞ்சல் மற்றும் தடசு உள்ளிட்ட மரங்களின் பட்டைகளை சாப்பிட்டு வாழ்கின்றன.
அதேபோல், மான், கடமான், வரையாடு உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை, வனத்திலுள்ள புற்கள், செடிகள் உள்ளிட்ட தாவரங்களை உட்கொண்டு வாழ்கின்றன.இந்நிலையில், கோடை காலத்தில் வனம் பசுமை இழந்து, புற்கள், செடிகள், மரங்கள் காய்ந்தன. குட்டை, சிற்றோடைகள் உள்ளிட்ட நீராதாரங்கள் வறண்டதால், வனவிலங்குகள் தண்ணீருக்காக அலைமோதின.உணவு, நீருக்காக யானை, மான் உள்பட வனவிலங்குகள், வனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள விளைநிலங்கள், நீராதாரங்களை தேடி சென்றன. நவமலை, ஆழியாறு வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் ஆழியாறு அணைக்கும்; சேத்துடை சுற்றுப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் சர்க்கார்பதி பகுதிக்கும் வந்தன.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கோடைமழை பெய்தது. தற்போது, தென்மேற்கு பருவமழை பெய்வதால், வனம் பசுமைக்கு திரும்பியுள்ளது.சிற்றோடை, ஓடை, குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. வனத்தினுள் போதிய உணவு, நீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், வனவிலங்குகள் அடர்ந்த வனத்துக்கு திரும்பியுள்ளன.
இதனால், மனித - வனவிலங்கு மோதல் குறையும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறியதாவது:பொள்ளாச்சி வனச்சரகத்தில், வனவிலங்குகள் தாகம் தீர்க்க தடுப்பணை, கசிவுநீர் குட்டை, தண்ணீர் தொட்டிகள், அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, மழை பெய்வதால், வனவிலங்குகளின் தேவை பூர்த்தியாகியுள்ளது.தென்மேற்கு பருவமழை காலத்தில், உணவு, நீருக்காக, பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயருவது வழக்கம். தற்போது, நவமலை, ஆழியாறு, சேத்துமடை சுற்றுப்பகுதிகளில் இருந்த யானைகள், மான்கள் கேரளா நோக்கி செல்கின்றன.இவ்வாறு, தெரிவித்தார்.