| 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர்கள் கருகின! தியாகதுருகத்தில் விவசாயிகள் கவலை Dinamalar
2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர்கள் கருகின! தியாகதுருகத்தில் விவசாயிகள் கவலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
01:59

தியாகதுருகம்: -தியாகதுருகம் பகுதியில் கடும் வறட்சியால் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி கருகின.தியாகதுருகம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது.


ஓராண்டில் விளைந்து பயன்தரும் கரும்பு பயிருக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது அவசியமாகும்.இதனால் கிணற்று பாசனத்தை நம்பியே கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. அளவான தண்ணீர் தேவை, பராமரிப்பது எளிது என்பதால் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.


இதன்விளைவாக நெல் சாகுபடி பரப்பு குறைந்து கரும்பு பயிரிடுவது அதிகரித்தது.பருவமழை சீராக பெய்து நீர் நிலைகள் நிரம்பினால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணற்றுப்பாசனம் மூலம் கரும்பு மகசூல் அதிகரித்து நல்ல லாபம் ஈட்டித் தரும்.கடந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்ததால் கோடைகாலம் துவங்குவதற்கு முன்பேகடும் வறட்சி ஏற்பட்டது.


இதனால் ஜனவரி மாதத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.இது கோடையில் மேலும் அதிகரித்தது. விவசாயிகளும் கடன் வாங்கி கிணற்றை ஆழப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால், நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்குச் சென்றதால் தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து கிணற்றில் தண்ணீர் சுரக்கும் அளவுக்கு தகுந்தார் போல் தண்ணீர் பாய்ச்சும் பரப்பை குறைத்துக் கொண்டனர்.அதைத் தவிர்த்து மற்ற இடங்களில் இருந்த கரும்பு பயிர் தண்ணீரின்றி கருகத் தொடங்கியது.கோடை மழை கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் ஏமாற்றியது. தென்மேற்குப் பருவமழையும் தாமதமாக துவங்கி இதுவரை எதிர்பார்த்த மழையை கொடுக்கவில்லை.


இதன் காரணமாக தியாகதுருகம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிர்கள் முற்றிலும் கருகிவிட்டது.மீதமுள்ள கரும்பு பயிர்களும் தண்ணீர் பற்றாக்குறையால் சோலைகள் வாடிய நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது.கரும்பு சாகுபடி செய்த இடங்கள் பசுமையாக காட்சி அளிப்பதற்கு பதிலாக, வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பயிர்களின் சோலைகள் கருகி மஞ்சள் நிறத்திற்கு மாறிவிட்டது.நெல் சாகுபடி பரப்பு மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்ட நிலையில் கரும்பு பயிரும் கடும் நஷ்டத்தை கொடுத்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.வறட்சியால் கருகிய கரும்பு பயிருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X