கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் கோமுகி ஆற்றின் மீது 2.32 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துவங்கிய நிலையிலேயே பூமி பூஜையோடு நின்று போனதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, தோப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவம், கல்வி, தினசரி அலுவல் போன்ற முக்கிய தேவைகளுக்கு தினமும் கள்ளக்குறிச்சிக்கு வருகின்றனர். சடையம்பட்டு வழியாக கோமுகி ஆற்றினை கடந்தால் 6 கி.மீ., தொலைவிற்குள் கள்ளக்குறிச்சியை அடைய முடியும்.ஆனால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் வரும் போது, இவர்கள் சோமண்டார்குடி, மோ.வன்னஞ்சூர், ரோடு மாமாந்துார் வழியாக 15 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு கள்ளக்குறிச்சி வரவேண்டும்.
இதனால் மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்து வந்தனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சிராயபாளையம் சாலையிலிருந்து சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி வழியாக பாரத பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் சார்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது.அத்துடன் கடந்த மார்ச் 2ம் தேதி கோமுகி ஆற்றின் மீது உயர்மட்டம் பாலம் அமைக்கும் பணிக்காக 2.32 கோடி ரூபாய் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டது. உடனடியாக பில்லர் போடுவதற்கான பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களின் நீண்ட கால தேவை உடனடியாக தீர்ந்துவிடும் என்ற கனவில் மிகுந்த எதிர்பார்ப்போடு பாலம் கட்டுமானப் பணி துவங்கி எப்போதும் முடியும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால், ஆற்றின் மீது உயர்மட்டம் பாலம் அமைப்பதற்கான பணிகள், பூமி பூஜை நடத்தப்பட்டதோடு எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு மழைக்காலத்திற்குள் பணிகள் நிறைவடைந்து, புதிய பாலத்தில் செல்லலாம் என நினைத்திருந்த மக்களுக்கு, பணிகள் கிடப்பில் போடப்பட்டது அதிர்ச்சியையும், அதிகாரிகள் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.இனியும் தாமதிக்காமல் பாலத்தின் பணியை விரைந்து துவங்கி முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.