| ஆசிரியரின் சம்பளம் மாணவர்களிடம் வசூல்: அரசு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் Dinamalar
ஆசிரியரின் சம்பளம் மாணவர்களிடம் வசூல்: அரசு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:33

பனமரத்துப்பட்டி: அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆங்கில வழி கல்வியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியருக்கு, சம்பளம் வழங்க, மாணவர்களிடம் நன்கொடை வசூலித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.


சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அய்யனார், 42. இவருடைய மகன் இன்பதமிழனை, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் பிளஸ் 1 ல், சேர்க்க மே மாதம் சென்றார். மாணவர் சேர்க்கைக்கு பள்ளி நிர்வாகம், 5,000 ரூபாய் கேட்டுள்ளது. இதனால், பள்ளியில் மாணவரை சேர்க்காமல் திரும்பினார். இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்நிலையில், அரசுப்பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, நேற்று பனமரத்துப்பட்டியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அய்யனார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூமொழி, தமிழர் கலாசார இயக்க ஒருங்கிணைப்பாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர். இதையடுத்து கட்டணமின்றி, பிளஸ் 1 ல், கலை தொடர்பு ஆங்கிலம் பாடப்பிரிவில், அந்த மாணவர் சேர்க்கப்பட்டார்.


இது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஆங்கில வழி கல்வியில் பிளஸ் 1ல், மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், கணிதம் கணிப்பொறி அறிவியல், கலை தொடர்பு ஆங்கிலம் ஆகிய இரு பாடப்பிரிவுகள் கூடுதலாக துவக்கப்பட்டது. இதனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. பி.டி.ஏ., நிர்வாகிகள், பெற்றோருடன் கலந்து பேசி, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க, அனைத்து பெற்றோரும் நன்கொடை கொடுக்க ஒப்புக்கொண்டனர். தற்போது, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒருவர் நியமிக்கப்படுவார். மாணவர்களின் பெற்றோர் வழங்கிய தொகை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, ஆசிரியருக்கு சம்பளம் வழங்கப்படும். இதற்கு முறையான கணக்கு வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X