| வீட்டு சந்துவழி பிரச்னையில் போலீசார் 'அடாவடி': ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி Dinamalar
வீட்டு சந்துவழி பிரச்னையில் போலீசார் 'அடாவடி': ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:38

சேலம்: வீட்டு சந்துவழி பிரச்னையில், போலீசார் அடாவடியாக செயல்படுவதாக கூறி, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர், நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர்.


சேலம், அரிசிப்பாளையம் அடுத்த சாமிநாதபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் பழனிசாமி, 68. இவரது மனைவி கனகவல்லி, 52. இவர்கள், தன் மகன் தேவராஜ், 38, மருமகள் சரண்யா, 36, மற்றும் பேரன், பேத்தி என, ஆறு பேர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது, திடீரென தங்கள் மீது, மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி மீட்டனர். சேலம், டவுன் போலீசில் வைத்து, அவர்களிடம் விசாரணை நடந்தது.


அப்போது, தேவராஜ் கூறியதாவது: தனியார் நிறுவனத்தில், அப்பா காவலாளி, நான் ஓட்டுனராக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள், 864 சதுர அடியில் வீடு கட்டி, கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். வீட்டையொட்டியுள்ள சந்து, எங்களுக்கு சொந்தமானது. பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜசேகர், 65, அவரது மகன் நடராஜ், 28, ஆகியோர் சந்து இடம் அவர்களுக்கு சொந்தமானது எனக்கூறி, ஐந்தாண்டுகளாக பிரச்னை செய்து வருகின்றனர். இது தொடர்பாக, அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தள்ளுபடியாகிவிட்டது. மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதற்காக, எங்கள் பாத்ரூமை கண்காணிக்கும்படி, 'சிசிடிவி' கேமரா பொருத்தி பிரச்னை செய்தனர். பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்த பின், கேமரா அகற்றப்பட்டது. ராஜசேகர், வேலைவாய்ப்பு அலுவலக ஓய்வு அதிகாரி, நடராஜ் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர் என்ற செல்வாக்கு, அதிகாரத்தை பயன்படுத்தி, போலீசார் மூலம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். போலீசாரும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, இன்ஸ்பெக்டர் சாய்ராம் சக்திவேல், எங்களை போக்சோவில் கைது செய்வதாக மிரட்டுகிறார். அந்த ஆடியோ பதிவு, போலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு வேண்டி தீக்குளிக்க முயன்றோம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X