மொடக்குறிச்சி: அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, பெரியார் நகர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மொடக்குறிச்சி யூனியன், முத்துக்கவுண்டன்பாளையம் பஞ்., பெரியார் நகரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மாணவ, மாணவியருக்கு, பெரியார் நகரில், தனியாருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 28 பேர் படித்து வருகின்றனர். கழிப்பறை, தண்ணீர், விளையாட்டு மைதானம், சமையலறை வசதி என அடிப்படை வசதி எதுவுமில்லை. அனைத்து மாணவர்களுக்கும், ஒரே அறையில் பாடம் நடத்த வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களும் அவதிக்கு ஆளாகின்றனர். பள்ளி நேரத்தின்போது, சிறுநீர் கழிப்பதாக இருந்தால், தங்கள் வீடுகளுக்கு, மாணவர்கள் செல்ல வேண்டும். ஆசிரியைகளும் கழிப்பறை வசதியின்றி திண்டாடுகின்றனர். துவக்கப்பள்ளி கட்ட பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மெத்தனமாக உள்ளனர். பெரியார் நகரில் துவக்கப்பள்ளி கட்டடம் கட்ட, நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரியார் நகர் மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.