கோவை:கடந்த இரு நாட்களாக, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லை; நீர் இருப்பு, 1.71 அடியாக குறைந்திருப்பதால், மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் அதிகாரிகள் 'அப்செட்' ஆகியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் மழை பெய்யும் என்ற, வானிலை ஆய்வாளர்களின் கணிப்பு நம்பிக்கை தருகிறது.
கோவை மாநகரப் பகுதிக்கு சிறுவாணி, பில்லுார், ஆழியாறு அணைகளில் இருந்து குடிநீர் எடுத்து சப்ளை செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு, 26.57 கோடி லிட்டர் குடிநீர் தேவை. இதில், சிறுவாணி அணை நிரம்பி இருந்தால், 10 கோடி லிட்டர் எடுக்கப்படும்.ஆழியாறில், 76 லட்சம் லிட்டர், பில்லுாரில், 16 கோடி லிட்டர் பெறப்படும். சிறுவாணியில் நீர் மட்டம் குறைந்தால், பில்லுார் நீர் கைகொடுக்கும்.கடந்த 9ம் தேதி, சிறுவாணி அணை அமைந்துள்ள, மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் மழை துவங்கியது. சிறிது, சிறிதாக நீர் மட்டம் உயர்ந்தது. 1.64 அடிக்கே இருந்த நீர் மட்டம், 2.03 அடிக்கு உயர்ந்தது.ஆனால், ஒரு வாரத்தில் மழை நின்று விட்டது. இருப்பினும், தொடர்ந்து நீர் எடுப்பதால், மட்டம் குறைந்து வருகிறது. நேற்று, 3.8 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து, வினியோகிக்கப்பட்டது. தற்போது, 1.71 அடிக்கே நீர் இருப்பு இருக்கிறது.இது வறண்ட வரலாறு!கோவை வரலாற்றில், 2012 மற்றும் 2016ல் குடிநீர் பிரச்னை அதிகமாக ஏற்பட்டது. 2012ல், சிறுவாணியில் குறைந்தபட்ச இருப்புக்கு கீழாக, 2 மீட்டர் ஆழத்துக்கு நீர் மட்டம் இறங்கியது.பழைய அணை அமைந்துள்ள பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர், கேரள அரசின் அனுமதி பெற்று, மின் மோட்டார் மூலம், 'பம்ப்' செய்து, அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அதேபோல், 2016ல் இரு பருவ மழையும் பொய்த்தன. குடிநீர் தேவைக்காக தொடர்ந்து நீர் எடுத்ததால், பழைய அணை வெளியே தெரியும் அளவுக்கு, நிலைமை படுமோசமானது; அப்போதும், சமாளித்தோம். ஆகவே, இந்த முறை கவலைப்படத் தேவையில்லை என்கின்றனர் அதிகாரிகள்.குடிநீர் பிரச்னை வராதுகுடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், '2017 முதல் பருவம் தவறாமல், மழைப்பொழிவு காணப்படுகிறது.
கடந்தாண்டு கோடை மழை எதிர்பார்க்காத அளவுக்கு பெய்தது. அதனால், போதுமான தண்ணீர் அணையில் இருப்பு இருந்தது. நடப்பாண்டு கோடை மழை பெய்யாததால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தாமதமாகி வருகிறது; 20ம் தேதி துவங்குமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செப்., வரை பெய்ய வாய்ப்பு இருப்பதால், கோவைக்கு குடிநீர் பிரச்னை வராது' என்றனர்.