| விட்டால் போதுமென ஓடிப்போனது 'ஓபோ': திருட்டு சைக்கிள் தெருவுக்கு வந்தது இப்போ! Dinamalar
விட்டால் போதுமென ஓடிப்போனது 'ஓபோ': திருட்டு சைக்கிள் தெருவுக்கு வந்தது இப்போ!
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:42

கோவை:சீனாவை சேர்ந்த, 'ஓபோ' நிறுவனம், கோவையில் செயல்படுத்திய சைக்கிள் பகிர்வு திட்டம் தோல்வியடைந்ததால், அந்நாட்டுக்கே திரும்பிச் சென்று, ஓராண்டாகி விட்டது. இவ்வளவு நாட்களாக அந்நிறுவன சைக்கிள்களை, வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த சிலர், இப்போது தைரியமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.


பாதுகாப்பான பயணம், சுற்றுச்சூழல் மாசு குறைத்தல், போக்குவரத்து நெருக்கடி தவிர்த்தல் என, பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், வாடகை அடிப்படையில், சைக்கிள் பகிர்வு திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி முடிவு செய்தது.இத்திட்டத்தை செயல்படுத்த, சீனாவை சேர்ந்த 'ஓபோ' நிறுவனம் முன் வந்தது. அந்நிறுவனத்துடன் கைகோர்த்த மாநகராட்சி, பரீட்சார்த்த முறையில் ஆர்.எஸ்.புரத்தில், கடந்தாண்டு மார்ச் 3ல் திட்டத்தை துவக்கி வைத்தது. அன்றைய தினம் மட்டும், 6,000 பேர், புதிய சைக்கிளை ஆர்வமுடன் ஓட்டினர்.சைக்கிள் எங்கெங்கு பயணிக்கிறது என்பதை, ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பத்தால், கண்காணிக்க முடியும். யாரும் திருட முடியாது என்ற நம்பிக்கையில், முன்பணம் வசூலிக்காமல், சைக்கிள் வழங்கப்பட்டது.வாங்கிச் சென்ற சிலர், தங்கள் வீட்டுக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டனர். அதிர்ச்சி அடைந்த ஓபோ நிறுவனம்ல திட்டத்தை கைவிட்டு, சீனாவுக்கு கிளம்பியது. 1,000 சைக்கிள் இறக்குமதி செய்ததில், 900 சைக்கிள்களே திரும்ப கிடைத்தன; மீதமுள்ள சைக்கிள்கள் திருடு போயிருந்தன; சில உடைக்கப்பட்டு, ரோட்டில் வீசப்பட்டன.இந்நிலையில், வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த சைக்கிள்களை, தற்போது சிலர் தைரியமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.தக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாமல், மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டம், வீணாய் போனதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.


மீண்டும் வர வாய்ப்பில்லை!மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மாதிரி சாலையில் 'சைக்கிள் டிராக்' ஏற்படுத்தப்படும். டி.பி., ரோட்டில் மாதிரி சாலை உருவாக்கும் வேலையே, பல ஆண்டுகளாக இழுக்கிறது. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணி இப்போதுதான் நடக்கிறது. இனி, தொலைதொடர்பு மற்றும் மின் ஒயர்களை, இடம் மாற்றி பதிக்க வேண்டும். அதன்பின், மாதிரி சாலைக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். அதுவரை, மீண்டும் அந்நிறுவனம் வர வாய்ப்பில்லை' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X