செம்பட்டி : மணல், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, வேலைவாய்ப்பின்றி கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
ஆத்துார், சின்னாளபட்டி, கொடைரோடு, கன்னிவாடி பகுதிகளில் சில மாதங்களாக பருவமழை பொய்த்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நகர் பகுதி மட்டுமின்றி மலையடிவார கிராமங்களும், தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இதையடுத்து வீட்டு உபயோக தண்ணீர் தேவை காரணமாக, டேங்கர் தண்ணீருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.இச்சூழலில் மணல் வினியோகமும் வெகுவாக பாதித்துள்ளது. கடந்த மாதத்தில் ஒரு லாரி மணல் ரூ.35 ஆயிரம் வரை விலை அதிகரித்தது. நடுத்தர, ஏழை மக்களின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கூடுதல் விலையிலும் மணல் மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பெருமளவு ஸ்தம்பித்துள்ளன. இத்தொழிலை மட்டுமே நம்பியிருந்த கிராமப்புற தொழிலாளர்கள், வருவாய் வாய்ப்பின்றி செய்வதறியாது திகைத்துள்ளனர்.