| பசுமையை மீட்டெடுக்க வேண்டுகோள் Dinamalar
பசுமையை மீட்டெடுக்க வேண்டுகோள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
04:43

திண்டுக்கல்: ''கிராமங்களில் பசுமையை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் திடக்கழிவு மேலாண்மையில் பங்கேற்க வேண்டும்'' என, கலெக்டர் வினய் வேண்டுகோள் விடுத்தார்.



மத்திய அரசின் சுற்று சூழல் துறை அமைச்சகம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் அபாயகரமான கழிவுகள், திடக்கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் கட்டட கழிவுகளின் மேலாண்மை குறித்த பயிற்சி கருத்தரங்கம் கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது. உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர்.கலெக்டர் பேசியதாவது: திடக்கழிவு மேலாண்மை சங்கிலி தொடர்பு போன்றது. ஒரு இடத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும் திட்டம் முழுமை பெறாது. வீடுகளில் மக்கும், மக்காத குப்பைகளை சரியாக பிரித்து கொடுக்க வேண்டும். அதற்கேற்ப உள்ளாட்சி அமைப்பினர் அகற்ற வேண்டும். குப்பை கிடங்கில் மறு சுழற்சிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும்.பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்தப்பட்டும், தேர்தல் என்பதால் தொய்வு ஏற்பட்டது. அதை பயன்படுத்தி மக்கள் மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வரும் நாட்களில் முழு அளவில் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பயன்படுத்துவோருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப் படும்.கட்டட கழிவுகளை இரவு நேரத்தில் ரோட்டோரம் மற்றும் வரத்து கால்வாய் பகுதிகளில் கொட்டுகின்றனர். இதனால் நீராதாரங்கள் பாதிக்கப்படுகிறது. கிராமங்கள் பசுமையாக இருக்க திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படுத்த வேண்டும், என்றார்.மாநகராட்சி ஆணையாளர் பாலசந்திரன், தேசிய உற்பத்தி திறன் குழும துணை டைரக்டர் ஜெனரல் ராஜூ, துணை இயக்குனர் சீனிவாசன், உதவி இயக்குனர் சந்தியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X