| சோமவாரப்பட்டியில் 'அம்மா' பூங்கா இந்தாண்டு பயன்பாட்டுக்கு வருமா? Dinamalar
சோமவாரப்பட்டியில் 'அம்மா' பூங்கா இந்தாண்டு பயன்பாட்டுக்கு வருமா?
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

20 ஜூன்
2019
14:16
பதிவு செய்த நாள்
ஜூன் 20,2019 01:13

உடுமலை : இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் நடக்கும், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைய பணிகளை முடித்து, இந்தாண்டாவது பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என, குடிமங்கலம் ஒன்றிய மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.தமிழக அரசு, 2016ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என, அறிவித்தது.



அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியத்திலும், ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேலுள்ள இரண்டு ஊராட்சிகளை தேர்வு செய்ய, ஒன்றிய நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களில், பெரியளவில் பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் இல்லாத நிலையில், அரசுத்திட்டத்துக்கு, அதிக எதிர்பார்ப்பும் வரவேற்பும் காணப்பட்டது.பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலைய பராமரிப்பு பணிகளை, அந்தந்த ஊராட்சிகளே மேற்கொள்ள வேண்டும் என்பதால், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள ஊராட்சிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. குறைந்தபட்சம், 35 சென்ட் அளவுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது.அதன்படி, உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில், மூன்று ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. உடுமலையில் போடிபட்டி மற்றும் பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளும், குடிமங்கலம் ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் போதிய வருமானம் இல்லாததால், சோமவாரப்பட்டி ஊராட்சி மட்டுமே இத்திட்டத்துக்கு, தேர்வு செய்யப்பட்டது.



இதில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, போடிபட்டி, பெரியகோட்டை ஊராட்சிகளில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில், பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நடந்து வருகிறது.எப்போது முடியும்?சோமவாரப்பட்டி பூங்காவில், நடைபாதை மற்றும் புல்தரை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஓய்வெடுக்கும் இருக்கைகளை பொருத்த வர்ணம் பூசும் பணி நடக்கிறது.



சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், உடற்பயிற்சி மையத்தின் உட்புறத்தில், பளுதுாக்குதல், பாடிபில்டிங் போன்ற போட்டிகளில் பங்கேற்க, தேவையான நவீன கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இக்கருவிகள் கொண்டு வரப்பட்டு, இன்னும் பொருத்தப்படாமல் உள்ளது.'இடத்தேர்வு பிரச்னையால், சோமவாரப்பட்டியில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைய பணிகள் காலதாமதமாக துவங்கியது. விரைவில், மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறக்கப்படும்,' என கடந்தாண்டு, ஒன்றிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.



ஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. இந்தாண்டாவது பூங்காவுக்கு திறப்பு விழா நடத்தப்படும் என குடிமங்கலம் ஒன்றிய மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.அதையும் கவனியுங்க...குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தின் எதிரில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. தன்னார்வலர்கள் சார்பில், மைதானத்தில், நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. தற்போது, மைதானம் போதுமான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இந்த மைதானத்தையும், அவ்வப்போது, வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களால் துாய்மைப்பணிகளை மேற்கொண்டால், மக்களும், மாணவர்களும் பயன்பெறுவர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X