கோவை : ''கோவைக்கு எதிர்பார்த்த மழை கிடைக்கும் எனினும், கால அளவுகள் மாறுபடும். எதிர்வரும் பத்து நாட்களில், தென்மேற்கு பருவமழை துவங்கி விடும்,'' என தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், கோடை மழை 136 மி.மீ., தென்மேற்கு பருவமழை 210 மி.மீ., வடகிழக்கு பருவமழை 305 மி.மீ., உட்பட, ஐம்பது ஆண்டுகால சராசரி மழை பொழிவு, 651 மி.மீ., ஆக உள்ளது. இந்நிலையில், கோடை மழை, 136 மி.மீட்டருக்கு., பதிலாக 101.4 மி.மீ.,தான் பதிவாகியுள்ளது.
மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, இதுவரை துவங்கவில்லை. தென் மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில், 43 மி.மீ., சராசரியாக பெய்ய வேண்டும். ஆனால், நேற்று மாலை நிலவரப்படி, வெறும், 10.1 மி.மீ., மழையே பெய்துள்ளது.தற்போது நிலவும், வெயிலின் அளவை கொண்டு பார்க்கும்போது, எதிர்வரும் பத்து நாட்களில் ஜூன் மாதத்துக்கான, 33 மி.மீ., மழையை, எதிர்பார்க்க இயலாது என வல்லுனர்கள் கூறியுள்ளனர். வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், ''கடந்த, 8ம் தேதி கேரளாவில் துவங்கிய மழையின் தாக்கம், கோவையில் இருந்தது; ஆனால், தொடரவில்லை. தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், ஜூன் மாதம், 43 மி.மீ., ஜூலை மாதம் 68.5 மி.மீ., ஆக., மாதம் 30.7 மி.மீ., செப்., மாதம் 68 மி.மீ., சராசரியாக பெய்ய வேண்டும்.
ஆனால், ஜூன் மாதத்தில் இதுவரை, 10.1 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது.எதிர்பார்த்த மழை கிடைக்கும் எனினும், கால அளவுகள் மாறுபடும். ஜூலை இரண்டாம் வாரத்திற்கு பின்பும், ஆக., செப்., மாதமும் நல்ல மழை இருக்கும். எதிர்வரும் பத்து நாட்களில், தென்மேற்கு பருவமழை துவங்கி விடும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.ஈரச்சாக்கு போர்த்துங்க!வெளிநாட்டு கலப்பு மாடுகள் இந்த சூழலை எதிர்கொள்வது, பெரும் சவாலாக இருக்கும். மாடுகளின் மீது, ஈரமான சணல் சாக்குகளை நனைத்து, போட்டு விடலாம்.
ஈரச்சாக்குகளை, தொழுவத்தை சுற்றி கட்டி விட்டால், குளிர்ந்த காற்று கிடைக்கும். தீவனங்கள் முறையாக கொடுக்க வேண்டும். ஆலோசனைகள் தேவைப்படுவோர், தீவனப்பயிர் துறையை அணுகலாம்.கால்நடைகள் கவனம்!மழையின்மை, வெயில் அதிகரிப்பு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற இச்சிக்கலான சூழலில், விவசாயிகள் கால்நடைகள் மீது, அதிக கவனம் செலுத்த வேண்டும். 6 லிட்டர் பால் கொடுக்கும் ஒரு மாடு கட்டாயம்; 24 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாட்டுக்கு, தண்ணீர் தேவை, 40 லிட்டர் இருக்கும். வெப்பத்திலிருந்து காக்க, பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.