| அட...கருப்பு தங்கம்:  மலைப்பகுதிகளில் பயிராகும் மிளகு Dinamalar
அட...கருப்பு தங்கம்:  மலைப்பகுதிகளில் பயிராகும் மிளகு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

20 ஜூன்
2019
14:12
பதிவு செய்த நாள்
ஜூன் 20,2019 01:55

பேரூர் : மிளகை 'கருப்பு தங்கம்' என விவசாயிகள் செல்லமாக வர்ணிப்பதுண்டு. அந்தளவு சர்வதேச சந்தைகளில் அதன் மதிப்பு உள்ளது. நிழல் மற்றும் ஈரப்பதம் உள்ள, மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் என கருதப்பட்டு வந்த மிளகு, முதல் முறையாக கோவை பேரூர், செம்மேடு பகுதி தோட்டங்களிலும் சாகுபடியாக துவங்கியுள்ளது;விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மிளகு கொடிகள் தென்னை, பாக்கு போன்ற உயர்ந்த மரங்களின் மீது படர்ந்து வளர்கிறது. தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட செம்மேடு கிராமத்தில், மிளகு சாகுபடியை ஊடுபயிராக பயிரிட்டு விவசாயிகள் லாபம் பார்த்து வருகின்றனர்.இப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், 'மிளகு சாகுபடிக்கு இதமான காலநிலையுடன், நிழல் நிறைந்திருக்க வேண்டும். தென்னை, பாக்கு தோப்புகளில் ஆண்டு முழுவதும், நிழல் நிறைந்திருக்கும். மிளகு கொடி பற்றி படர்வதற்கு ஏதுவாக, டயர்களை மரங்களில் கட்டியுள்ளோம். ஒரு பாக்கு மரத்துக்கு, ஒரு மிளகு கொடி நடவு செய்யப்பட்டுள்ளது. மிளகுக்காக தனியாக பராமரிப்பு எதுவும் இல்லை. தென்னை, பாக்குடன் உபரி வருமானமும் கிடைக்கிறது. மலைப்பகுதிகளில் மட்டுமே பயிர் செய்யப்பட்ட மிளகு, சமவெளிகளிலும் கணிசமாக சாகுபடியாவது மகிழ்ச்சி தருகிறது' என்றார்.'மிளகு நாற்று தருகிறோம்' தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசந்தி ஞானசேகரன் கூறுகையில், ''மித வெப்ப மண்டல பயிரான மிளகு, அதே சீதோஷ்ணம் உள்ள தொண்டாமுத்துார், வேடபட்டி பகுதிகளில் கணிசமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை, பாக்கு மரங்களுடன் ஊடுபயிராக விளைவதால், கூடுதல் வருவாய் கிடைக்கும். தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், மிளகு சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது. அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில், இலவசமாக மிளகு நாற்றுகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பெற்று பயனடையலாம்,'' என்றார்.மிளகு தற்போது ஒரு கிலோ, 800 - 1,000 ரூபாய் வரை, விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மிளகு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இப்பகுதியில் மிளகு சாகுபடியை பெருக்க, வேளாண் துறை முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X