செஞ்சி அடுத்த மாதப்பூண்டி கிராமம் செஞ்சியில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி கிராமமாக திருவண்ணாமலை மாவட்டத்தை ஓட்டி இக்கிராமம் உள்ளது.
இங்கு 4000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு 3 கி.மீ., துாரத்தில் உள்ள நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்திற்குச் சென்று வருகின்றனர். மற்ற தேவைக்கு கிராம மக்கள் செஞ்சி, திருவண்ணாமலைக்கு செல்கின்றனர்.இவர்கள் வந்து செல்லும் பிரதான வழியாக நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமம் உள்ளது. இந்த வழியில் நந்தன் கால்வாயும், ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலும் குறுக்கே செல்கின்றன. மழைக் காலங்களில் நந்தன் கால்வாயிலும், ஏரி வாய்க்கலிலும் தண்ணீர் வரும் போது இந்த வழியாகச் செல்ல முடியாது. கிராம மக்கள் 6 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு நாகலாம்பட்டு சென்று வரவேண்டும்.எனவே, இங்கு சிறு பாலம் கட்ட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
2015ம் ஆண்டு இரண்டு வாய்க்கால்களிலும் வெள்ள பெருக்கெடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நல்லாண்பிள்ளை பெற்றாள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.இதையடுத்து மாதப்பூண்டி நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் மற்றும் கிராம இளைஞர்கள் சேர்ந்து பனை, சவுக்கு மரங்களைக் கொண்டு மரத்தால் பாலம் அமைத்தனர். அப்போது நிரந்தரமாக மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடமும் மனு கொடுத்தனர்.இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தற்போது மாதப்பூண்டி கிராமத்தில தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா 23 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு சிறு பாலங்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பாலம் கட்ட தேர்வு செய்துள்ள இடத்தின் ஒரு பகுதி உடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிவலிங்கம் மனைவி செல்வி, 40; மாதப்பூண்டியை சேர்ந்த பழனி, 65; ஆகியோருக்கு சொந்தமானது. இந்த இடத்தை அரசு முறைப்படி கையகப்படுத்தி பாலம் கட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.இதனால், கிராம இளைஞர்கள் நிலத்தின் உரிமையாளர்களிடம் இது குறித்து பேசினர்.
இதையடுத்து செல்வி 4.75 செண்ட் நிலத்தையும், பழனி 5 செண்ட் நிலத்தையும் தானமாக தர முன்வந்தனர். நேற்று இவர்கள் தங்கள் இடத்தை அரசுக்கு தானமாக வழங்கி பத்திர பதிவு செய்தனர்.இதற்காக கிராம பொதுமக்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்தனர். இதன் மூலம் தங்களின் 40 ஆண்டு கால கோரிக்கை விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கி விட்ட மகிழ்ச்சியில் மாதப்பூண்டி கிராம மக்கள் உள்ளனர்.