கெங்கவல்லி: மர்ம விலங்கு கடித்து குதறியதில், ஆறு ஆடுகள் பலியாகின. கரடி கடித்து ஆடுகள் இறந்ததாக தகவல் வெளியானதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கெங்கவல்லி அருகே, கூடமலை கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்நிலா, 38, சந்திரா, 35; இவர்கள், விவசாயம் மற்றும் உபதொழிலாக ஆடு, மாடு வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற, 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வீட்டுக்கு அருகில், வழக்கமான இடத்தில் அடைத்துள்ளனர். நேற்று காலை, ஆறு ஆடுகள் படுகாயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வனத்துறை, கால்நடை மற்றும் வருவாய்துறையினர், ஆடுகள் இறப்புக்கு காரணம் குறித்து விசாரித்தனர். ஆடுகளை, கரடி கடித்து குதறியதாக அப்பகுதி மக்கள் கூறினர். இது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து, தம்மம்பட்டி வனச்சரகர் அசோக்குமார் கூறுகையில், ''பச்சமலை, பைத்தூர் காப்புக்காடு, கூடமலை வனப்பகுதிகளில் கரடி, செந்நாய்கள் எதுவும் இல்லை. எந்த விலங்கு கடித்து இறந்திருக்கும் என்று, காலடி தடம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார். இதுகுறித்து, கூடமலை கால்நடை மருத்துவர் வினோத் கூறுகையில், ''கொடூரமாக தாக்கக்கூடிய வனவிலங்குகள் தான், ஆடுகளை கொன்றுள்ளன. உடற்கூறு ஆய்வு செய்து, அதன் அறிக்கை விபரங்களை, கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம்,'' என்றார்.