தர்மபுரி: ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, தர்மபுரி அடுத்த, கெண்டேனஹள்ளி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட கெண்டேனஹள்ளியில், பெட்டமுகிலாளம் காப்புக்காடு மற்றும் மலைப்பகுதி உள்ளது. இங்கு, மழை காலங்களில் அதிகளவில் மழை பெய்யும். கடந்த, 1991ல், அப்போதைய அரசு, அணை கட்ட முடிவு செய்து, மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இப்பணி தொடராததால், அதிகளவில் மழை பெய்யும் நேரங்களில், ஏரியின் கரை மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால், 140 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி, தற்போது கரை இல்லாததால் பரந்து விரிந்த நிலப்பரப்பாக காணப்படுகிறது. கடந்த, 2007ல், இங்கிருந்த நிலப்பரப்பில் தனிநபர்கள், 24 பேருக்கு பட்டா வழங்கி உள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில் கூற மறுத்தனர். தற்போது சிறிதளவு மட்டுமே ஏரியின் கரை உள்ளது. காணாமல் போன ஏரியை கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிறுத்தப்பட்ட அணை கட்டும் பணியை மீண்டும் துவங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.