| அபாய நிலையில் மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம் Dinamalar
அபாய நிலையில் மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
09:02

தர்மபுரி: தர்மபுரி அருகே, திருப்பத்தூர் சாலையில் ஓடிந்து கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.


தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில், ஆண்டி ஹள்ளி பஞ்.,ல் நாயக்கன்கொட்டாய் உள்ளது. இங்கு, 3,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னையிலிருந்து ஒகேனக்கல் சுற்றுலா செல்வோரும், இதே சாலையில் வந்து செல்கின்றனர். அதனால், போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நாயக்கன்கொட்டாய் பஸ் நிறுத்தம் அடுத்துள்ள, வெள்ளாளப்பட்டி கிளை தபால் அலுவலகம் முன், சாலையில் உள்ள மின்கம்பம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு, ஒடிந்த நிலையில் நின்றது. மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற நிலை இருந்தது. இதையடுத்து, தர்மபுரி மின்வாரியம் சார்பில், புதிய மின்கம்பம் ஒன்றை கொண்டு வந்து போட்டனர். மூன்று மாதமாகியும் இன்று வரை ஒடிந்த மின்கம்பம் மாற்றப்பட்டவில்லை. புதிய மின் கம்பம் நட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக உள்ளனர். அதனால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. இது தொடர்பாக மக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டும், மின்துறை அதிகாரிகள் பாராமுகமாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், சேதமான மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X