| கந்து வட்டி கொடுமைக்கு நடவடிக்கை இல்லை: கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி Dinamalar
கந்து வட்டி கொடுமைக்கு நடவடிக்கை இல்லை: கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
10:22

கரூர்: போலீஸ் நடவடிக்கையால் விரக்தியடைந்து, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் வளாகத்தில், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த, அறிவானந்தம், 35 என்பவர், உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு அழைத்துச் சென்றனர்.


விசாரணையில் அறிவானந்தம் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன், கரூர் காந்திகிராமத்தில் இடம் வாடகை பிடித்து, ஓட்டல் நடத்தி வந்தேன். அந்த இடத்தின் உரிமையாளரிடம், நான்கு லட்சம் ரூபாய் கந்து வட்டி கடன் பெற்றேன். அதை, 100 நாட்களில் திருப்பி செலுத்தி விட்டேன். அவரிடம் ஏலச் சீட்டு கட்டி இருந்தேன். அந்த பணத்தை கேட்ட போது, செலுத்திய கடனில் பாக்கி உள்ளது என மிரட்டினார். மூன்று மாதங்களுக்கு முன், பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் செய்தேன். அப்போதைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அழைத்து பஞ்சாயத்து பேசினார். என்னிடம் இருந்த ஆதாரங்களைப் பிடுங்கிக் கொண்டு விரட்டி அடித்துவிட்டார். அதன் பின், என்னுடைய எந்த புகாரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார். நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக, கடந்த வாரம் பெண் ஒருவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நிலையில், நேற்று மீண்டும் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போலீசாருக்கு கலெக்டர் அட்வைஸ்: குறைதீர் கூட்டம் முடிந்து வெளியில் வந்த கலெக்டர் அன்பழகன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், "கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனுக்களை கொடுக்கின்றனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பே, இதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால், நமக்கு தேவையில்லாமல் பிரச்னை ஏற்படுகிறது. பொதுமக்கள் உடமைகளை உரிய முறையில் சோதனை செய்து அனுப்ப வேண்டும்,” என்றார்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X