| ஆக்கிரமிப்பு அகற்றம் கடமையுணர்வா: கண்துடைப்பா Dinamalar
ஆக்கிரமிப்பு அகற்றம் கடமையுணர்வா: கண்துடைப்பா
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:07

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் ஆக்கப்பூர்வமான கடமை உணர்வா அல்லது கண் துடைப்பு நடவடிக்கை தானா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.சிவகங்கையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.




இக்கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்தும், நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



அப்போது வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து நீர்பிடிப்பு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அங்கு ஆக்கிரமிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க ஜெயகாந்தன் உத்தரவிட்டார். ஆனால் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளது. முக்கிய ஊரணி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தும் அவற்றை அகற்றுவதற்கான பூர்வாங்க பணி எதுவும் இதுவரை துவங்கவில்லை. ஆக்கிரமிப்பு இல்லாத கண்மாய், குளங்கள் மட்டும் மாவட்ட நிர்வாகம் வாங்கிய இயந்திரங்கள் மூலம் துார்வாரப்படுகிறது.



பல இடங்களில் ஊரணி, குளம், ஏரி என போட்டி போட்டு ஆக்கிரமிக்கப்பட்டு நீர்நிலைகள் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது.அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்களிடமிருந்து பல்வேறு புகார் வந்தும் அரசியல் தலையீடு காரணமாக மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சிங்கம்புணரியில் நல்லாகுளம், பள்ளங்குண்டு ஊரணிகள், திருப்புத்துாரில் சின்ன சீதளிகுளம் உள்ளிட்டவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.



எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நடந்த ஆய்வுக்கூட்டம் என்பது கடமை உணர்வா அல்லது நீதிமன்ற உத்தரவை சமாளிக்கும் கண்துடைப்பு நடவடிக்கையா என்பது அதிகாரிகளின் அடுத்து வரும் செயல்பாட்டை பொறுத்து தான் தெரிய வரும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X