அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி குடிநீர் விநியோக திட்ட பகிர்மான குழாய்களில் 'லீக்கேஜ்' உள்ளதால் லட்சக் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதை முறையாக சீர் செய்ய வேண்டிய துறை அதிகாரிகளால்தான் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்துார், மல்லாங்கிணறு, காரியாபட்டி மற்றும் கிராம பகுதிகளுக்கு தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. துாத்துக்குடி வல்லநாடு தாமிரபரணி ஆற்று பகுதியில் இருந்து குழாய்கள் பதித்து அதன் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. 167 கி.மீ., துாரம் வரையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மண் அழுத்தம் காரணமாக குழாய்கள் ஆங்காங்கு உடைகின்றன.
இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் தினமும் வீணாகிறது. நீர் கசிவை கண்டு பிடித்து சரி செய்வதற்கு ஒருசில தினங்கள் ஆவதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் மண்ணில் யாருக்கும் பயன் இன்றி போகிறது. முறையான பராமரிப்பு இல்லாததாலே அடிக்கடி குழாய்கள் பழுதாகின்றன. ஏற்கெனவே கடும் தண்ணீர் பிரச்னை இருக்கும் நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாவது கவலை அளிக்கிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தான் தாமிரபரணி குடிநீர் திட்டத்தை பராமரித்து வருகிறது.
அதிகாரிகள் பகிர்மான குழாய்களை அவ்வப்போது ஆய்வு செய்திருந்தால் இதுபோன்று குழாய்கள் உடைப்பு ஏற்பட்டிருக்காது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒவ்வொரு ஊர்களுக்கும் குறைவான தண்ணீர் தான் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நீர் கசிவால் குடிநீர் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.அருப்புக்கோட்டையில் தாமிரபரணி குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள ரயில்வே பீடர் ரோட்டில் ஆங்காங்கு நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து வரும் தண்ணீரை இப்பகுதி மக்கள் குடங்களில் பலமணி நேரம் காத்திருந்து சேகரம் செய்கின்றனர். குழாய்களில் உள்ள கசிவை சரி செய்தாலே குடிநீர் வீணாவது குறையும். மக்களுக்கும் பயன்படும்.இதன் மீது குடிநீர் வடிகால் வாரியத்தினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.