| அறிமுகம்! 'புதுச்சேரியில் பிச்சாவரம்' சுற்றுலா திட்டம்...சதுப்பு நில காட்டுக்குள் படகில் சாகச பயணம் Dinamalar
அறிமுகம்! 'புதுச்சேரியில் பிச்சாவரம்' சுற்றுலா திட்டம்...சதுப்பு நில காட்டுக்குள் படகில் சாகச பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:46

புதுச்சேரி:‛புதுச்சேரியில் பிச்சாவரம்' என்ற பெயரில், அலையாத்திக் காடுகளுக்கு மத்தியில் படகு சவாரி அழைத்து செல்லும் புதிய திட்டத்தை, சுற்றுலாத் துறை அறிமுகம் செய்ய உள்ளது.


புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில் சுற்றுலாத் துறை தீவிரமாக உள்ளது. இதன் எதிரொலியாக, புதுச்சேரிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களில், புதுச்சேரி கடற்கரை சாலை உள்ளிட்ட ஒரு சில இடங்கள் மட்டுமே, சுற்றுலா தலமாக திகழ்ந்தன. இதனால், சுற்றுலா பயணிகள் ஓரிரு நாட்களிலேயே பயணத்தை முடித்துக் கொண்டு புறப்படும் நிலை இருந்தது. இதையடுத்து, புதிய இடங்களை அடையாளம் கண்டு சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகளில் சுற்றுலா துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.காலாப்பட்டு, திப்ராயப்பேட்டை, அரிக்கன்மேடு, சின்ன வீராம்பட்டினம், நரம்பை, மணப்பட்டு, சுண்ணம்பாற்றின் தெற்கு பகுதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள கடற்கரை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, மெரினா பீச், ஈடன் பீச், டெம்பிள் பீச் போன்ற பெயர்களில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், இயற்கை சார்ந்த சுற்றுலாவின் ஒரு பகுதியாக, தேங்காய்திட்டு பகுதியில் 'மாங்குரோவ் பாரஸ்ட்' என அழைக்கப்படும் அலையாத்திக் காடுகளுக்கு மத்தியில் படகு சவாரி அழைத்து செல்வதற்கு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்துக்கு 'புதுச்சேரியில் பிச்சாவரம்' என பெயரிடப்பட்டுள்ளது.


இதற்காக படகுகள் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை இயக்குனர் முகமது மன்சூர் மற்றும் அதிகாரிகள் நேரடியாக படகுகளில் சென்று அலையாத்திக் காடுகளை சுற்றி பார்த்துள்ளனர்.தேங்காய்திட்டு முகத்துவார பகுதியில் ஆரம்பித்து, பல கிலோ மீட்டர் துாரத்துக்கு அலையாத்திக் காடுகள் செழித்து வளர்ந்துள்ளன. நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பச்சை பசேல் என பரந்து விரிந்துள்ள அலையாத்திக் காடுகளில் செங்கால் நாரை உள்ளிட்ட பல்வேறு வகையான நாரைகள், பல வகையான கொக்குகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் முகாமிட்டுள்ளன.முருங்கப்பாக்கத்தில், அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரத்தில் கலை மற்றும் கைவினை கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து அரியாங்குப்பம் ஆற்றின் வழியாக படகில் அரிக்கன்மேட்டுக்கு அழைத்து சென்றுவிட்டு, அங்கிருந்து தேங்காய்திட்டு பகுதியில் பரந்து விரிந்துள்ள அலையாத்திக் காடுகளுக்கு மத்தியில் படகு சவாரி நீள்கிறது.நகரப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகளுக்கு நடுவில் படகு சவாரி மேற் கொள்வது, சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, புதுச்சேரி மக்களுக்கு வித்தியாசமான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X