| குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு Dinamalar
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:30

மதுரை : மதுரையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்திலிருந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திரபிரதாப் யாதவ் வருகைக்காக கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் சென்றதால், ஆத்திரமுற்ற விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். வேளாண் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.



பின்னர் கலெக்டருக்காக ஒன்றரை மணி நேரம் விவசாயிகள் காத்திருந்து குறைகளை தெரிவித்தனர்.லோக்சபா தேர்தலையொட்டி மூன்று மாதங்களுக்கு பின், நேற்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வழக்கமாக மாத 3வது வெள்ளி நடக்கும் கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக நேற்று நடத்தப்பட்டது. கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் தலைமை வகித்தார். கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், சொட்டு நீர் பாசனத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் காரசாரமாக குற்றம் சாட்டினர்.



அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆய்வுக்கு வந்ததை ஊழியர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலருடன் செல்ல வேண்டியிருப்பதால் வேளாண் அதிகாரிகள் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவர் என மைக்கில் அறிவித்து விட்டு கலெக்டர் புறப்பட்டார். ஆத்திரமுற்ற பழனிசாமி, மணிகண்டன், திருப்பதி, கர்ணன், கோபாலகிருஷ்ணன், மாரிச்சாமி உட்பட விவசாயிகள் குறைகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டிய கலெக்டர் வெளியேறியதால் யாரிடம் குறைகளை தெரிவிப்பது என கேள்வி எழுப்பியவாறு வெளியேறினர். அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் ஒரு மாதமாக கலெக்டர் இல்லை. 45 நாட்களுக்கு மேலாக டி.ஆர்.ஒ., இல்லை.



கலால் அதிகாரியே கூடுதலாக கலெக்டர் பொறுப்பை கவனிப்பதால் அவருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. அனாதை மாவட்டமாக மதுரை உள்ளது. இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள். ஆனால் விவசாயிகள் பிரச்னைகளை கேட்க இங்கு ஆளில்லை. தண்ணீர் பிரச்னையால் விவசாயம் இல்லை,'என்றனர். வேளாண் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். மீண்டும் கலெக்டர் திரும்பி வரும் வரை, ஒன்றரை மணி நேரம் காத்திருந்து பின் விவசாயிகள் குறைகளை தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X