கோவை:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு அருகில், பேரூர் ஸ்ரீ மஹா பெரியவா மணிமண்டபம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் சாம வேத பாடசாலை திறப்பு விழா நாளை நடக்கிறது.பேரூரில் பிரம்ம உற்சவ காலங்களில் வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம் அன்னதானம் நடைபெற்று வந்த, 120 ஆண்டுகள் பழமையான பாராயண மடம் உள்ளது. இங்கு, ஸ்ரீ காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (மஹாபெரியவர்) மணி மண்டபமும், சாமவேத பாடசாலையும் அமைக்கப்படவுள்ளன. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பஞ்சலோக விக்ரஹம் பிரதிஷ்டை, ஆதிசங்கரர், வேத வியாஸர் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திரர் விக்ரஹங்களும் அமைக்கப்பட உள்ளன.அதன்படி, நாளை காலை 6:00 மணிக்கு வேதபாராயணம், 7:30க்கு ஆறாம் கால யாக பூஜை, 10:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 11:00க்கு மூலவர் கும்பாபிஷேகம், பகல் 12:00 மணிக்கு மஹா அபிஷேகம், மாலை 6:00 மணியளவில் ஸ்ரீ மஹா பெரியவா திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் திருவுருவ விக்ரஹத்தை சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, ஆத்துார், சேலம், ஈரோடு, பாலக்காடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து சென்று, பூரணகும்ப வேத மரியாதையுடன், பூஜை ஆராதனைகள் செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வது, நகர மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.புதிய வேதபாடசாலையில், வேதம், நாம பஜனைகள், நித்ய கர்மாக்கள், கர்நாடக இசை போன்ற அனைத்து விதமான கலைகளை வளர்க்கவும், பயிற்றுவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.