சூலுார்:சூலுாரில் டாஸ்மாக் கடைகளை விட, சில்லிங் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதனால், தங்கு தடையின்றி சரக்குகள் கிடைக்கின்றன.சூலுார் சுற்றுவட்டாரத்தில், 10 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், பார்களுடன் செயல்படுகின்றன. அதே நேரத்தில், சுமார், 51 இடங்களில், சில்லிங் விற்பனையும் கொடி கட்டி பறக்கிறது.டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, கிராமங்களில் விற்பனை செய்யும் வேலையை, பலர் வாடிக்கையாக செய்து வருகின்றனர். ஒவ்வொரு பாட்டிலுக்கும், ரூ. 30 முதல், ரூ. 40 வரை அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர்.வாடிக்கையாளர்களை ஈர்க்க, ஒரு டம்ளர், தண்ணீர், ஒரு பிடி மிக்சர் வழங்கும் வழக்கத்தையும் கடைபிடித்து வருவதால், வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. மாதா மாதம் மாமூல் போலீசாருக்கு வழங்கப்படுவதால், எந்த பயமும் இன்றி வியாபாரம் ஜோராக நடக்கிறது. சில மாதங்களுக்கு ஒரு முறை வழக்கும் பதிவு செய்யப்படுவதால், தங்கு தடையின்றி கல்லா கட்டுகின்றனர் சூலுார் போலீசார்.'தாபா ஓட்டல்கள்' முதல் முள் காடு வரை அனைத்து இடங்களிலும், விடிந்தும் விடியாமலும் விற்பனை துவங்கி விடுகிறது. இதனால், குடிமகன்கள், கூலித்தொழிலாளிகள் உட்பட பலரும் காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக சரக்கடிக்க துவங்கிவிட்டனர். மாவட்ட எஸ்.பி., அல்லது கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., சூலுார் பக்கம் கவனத்தை திருப்பினால், மட்டுமே சில்லிங் விற்பனை முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.