| விரிசல்!கொரட்டூரில் வீட்டு வசதி வாரிய வீடுகளில்... லட்சங்களை கொடுத்து வாங்கியோர் தவிப்பு Dinamalar
விரிசல்!கொரட்டூரில் வீட்டு வசதி வாரிய வீடுகளில்... லட்சங்களை கொடுத்து வாங்கியோர் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
01:59

அம்பத்துார்:கொரட்டூரில், புதிதாக கட்டப்பட்ட, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டடங்களில், பல இடங்களில், விரிசல் ஏற்பட்டுள்ளதால், பல லட்சம் ரூபாய் கொடுத்து, வீடு வாங்கியோர், அச்சத்தில் வசிக்கின்றனர். விஷ பூச்சிகள் நடமாட்டமும், அங்கு அதிகரித்துள்ளதால்,

மக்கள் தவிக்கின்றனர்.

சென்னை, கொரட்டூர், 25வது சாலையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின், புதிய குடியிருப்பில், ஜனவரியில், உரிமையாளர்கள் குடியேறினர்.


துர்நாற்றம்


அதில், 44, 45, 46 ஆகிய மூன்று வளாகங்களில், 222 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 30 - 42 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன.அதற்காக, வீட்டு உரிமையாளர்களிடமே, கணிசமான தொகை, முன்பணமாக பெறப்பட்டது. அந்த குடியிருப்புகளுக்கு மத்தியில், சென்னை குடிநீர் வாரியத்தின், கழிவுநீரகற்று நிலையம் அமைந்துள்ளது. கொரட்டூர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வெளியேற்றப்படும் மொத்த கழிவுநீரும், அங்கு சேகரிக்கப்படுகிறது. திறந்த நிலையில் உள்ள, கழிவுநீர் தொட்டிகளில் இருந்து, கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த குடியிருப்புகளில் வசிப்போர், சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். மேலும், கழிவுநீரகற்று நிலையத்தில் உள்ள உடைந்த குழாய் மற்றும் குப்பை கழிவுகளால், பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட, விஷ ஜந்துகள், வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள், மூச்சுத்திணறல் காரணமாக, உடல் நல பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.


அச்சம்


அங்குள்ள, 46வது குடியிருப்பு வளாகத்தில், வீடு வாங்கியவர்களில், 60 சதவீதம் பேர், மேற்கண்ட பிரச்னையால், அங்கு குடிவராமல், இன்னும் வாடகை வீட்டிலேயே வசிக்கின்றனர்.

மேலும், 44, 45வது வளாகங்களின் மையப்பகுதி மற்றும் கட்டடத்தின் ஒன்பது தளத்திலும், விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிப்போர், அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்னைகள் குறித்து, 'கேசில் 222 வீட்டுமனை உரிமையாளர்கள் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்' சென்னை மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.


தவிக்கும் மக்கள்


இதையடுத்து, வீட்டு வசதி வாரியத்தினர், விரிசல் உள்ள இடங்களில், தற்காலிகமாக, சிமென்ட் கலவை பூசினர். அவை, மூன்று தினங்களில் உதிர்ந்து, மண் குவியலாக கரைந்தன.

பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டில், குடியிருக்க முடியாமல் தவிக்கும் மக்கள், தங்களுக்கு, மாற்று இடம் வழங்க வேண்டுமென, கோரிக்கை வைத்தனர்.


கடந்த, 2016ம் ஆண்டு, பல லட்சம் ரூபாய் கொடுத்து வீடு வாங்கினோம். இந்தாண்டு, ஜனவரியில் தான், வீட்டு சாவி வழங்கப்பட்டது. இங்கு, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில், விரிசலும் அதிகரித்து வருவதால், விபரீதம் நேரும் என்ற அச்சத்திற்கு ஆளாகி உள்ளோம். அதிகாரிகளிடம் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதே பகுதியில், வீட்டுவசதி வாரியத்தால், 260 புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. அங்கு, எங்களுக்கு, மாற்று வீடு வழங்க வேண்டும்.


சி.உதயகுமார், 39, செயலர், கேசில், 222 வீட்டுமனை உரிமையாளர்கள் குடியிருப்போர் நலச்சங்கம், கொரட்டூர்.



 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X