கோத்தகிரி:கோத்தகிரி டானிங்டன் நீரோடை அருகே கட்டுமான கழிவுகளை கொட்டுவதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது.கோத்தகிரி டானிங்டன் நீரோடை ஆரம்பகாலத்தில் குடிநீராக பயன்பட்டு வந்தது. இந்த தண்ணீரை, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்த நிலையில், சமீபகாலமாக ஓடையில் கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, கோத்தகிரி நகரப்பகுதியில் வெளியேறும் கட்டடகழிவுகள் மற்றும் மண் குவியல் ஓடையை ஒட்டி, சாலையோரத்தில் கொட் டப்பட்டு வருவதால்,தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும், கட்டட கழிவுகளால் ஓடையில் ஆழமும் அகலமும் குறைந்துள்ளதுடன், காட்டு செடிகள் முளைத்து, ஓடை இருந்ததற்கான அடையாளமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 'மாவட்ட நிர்வாகம்,நீராதாரங்களில் குப்பைகள் கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டானிங்டன் ஓடையில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஓடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.