பந்தலுார்:பந்தலுார் நெல்லியாளம் நகராட்சி சார்பில், இயற்கை உரம் விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.நகராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உதவியாளர் முனியப்பன் வரவேற்றார். கமிஷனர்(பொ) சக்திவேல் தலைமை வகித்து பேசியதாவது:நெல்லியாளம் நகராட்சியில், 21 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கும் குப்பை ஏலமன்னா பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இங்கு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில், மட்கும், மட்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, உர கிடங்களில் மட்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், நீலகிரியை இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, பல விவசாயிகளும் இயற்கை விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு, விவசாய பொருட்கள் உற்பத்தி செய்துவருவதால், மக்கள் மத்தியிலும் இதன் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளும் நிலையில், மக்கள் உரங்களை வாங்கி பயன்படுத்தி கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு சக்திவேல் பேசினார்.தொடர்ந்து, முதல் கட்டமாக தயாரித்த இயற்கை உரத்தை விவசாயிகளுக்கும் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். மின் பணியாளர் சந்திரசேகர், குடிநீர் பணியாளர் வரதராஜ் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.