சேலம்: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், பட்டர்பிளை மேம்பாலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம், நான்கு பவுன் செயின் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்த லதா, 45, கடந்த ஜூன், 20ல், காலையில், பட்டர்பிளை மேம்பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, பல்சர் பைக்கில் வந்த இருவர் லதா அணிந்திருந்த, நான்கு பவுன் செயினை பறித்துக் கொண்டு மாயமாகினர். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் புத்தூர் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், பல்சர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் பாதி அறுந்த நிலையில், செயின் இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிவதாபுரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் கலையரசன், 21, கந்தம்பட்டி, ராஜீவ்நகரை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார், 21, என்பதும், லதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, நான்கு பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.