மதுரை : வைகை அணையை துார்வாருவது தொடர்பான அறிவிப்பை சட்டசபை மானிய கோரிக்கையில் முதல்வர் பழனிசாமி வெளியிடாதது மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மொத்த உயரம் 71 அடி. பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் 20 முதல் 22 அடி வரை மண் மேவியுள்ளது. கொள்ளளவான 6,868 மில்லியன் கன அடியில், 800 முதல் 1200 மில்லியன் கனஅடி வரை அளவை அணை இழந்துள்ளது.அணையை துார்வார விவசாயிகள் 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் துார்வார திட்டம் தீட்டிய அரசு 189 கோடி ரூபாய் செலவிட முன்வந்தது. திட்டத்தை மாற்றுவதும், மாற்று திட்டம் தீட்டப்படுவதுமாய் காலம் சென்றது.
அணையில் சிறு துரும்பு கூட அசையவில்லை. யார் கமிஷன் பார்ப்பது என்பதில் அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட போட்டியால் துார்வாரும் திட்டம் துாங்குகிறது. இதற்கிடையில் செலவின்றி வருமானத்துடன் அணையை துார்வாரும் புதிய திட்டத்தை பொதுப்பணித்துறை தயாரித்தது. அதன்படி துார்வாரும் நிறுவனம் மணல், வண்டல், செம்மண்ணை விற்றுக் கொள்ளலாம். 201 கோடி ரூபாய் வரை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த திட்டம். தற்போது வருவாய் தரும் இந்த திட்டமும், 189 கோடி ரூபாய் செலவு தரும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
முதல்வர் வசமுள்ள பொதுப்பணித்துறை மீதான மானிய கோரிக்கை சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்தது. 'வைகை அணையை துார்வாரும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார்' என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எந்த அறிவிப்பும் இல்லை. இது மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. விவசாயிகள் கூறுகையில், 'அணையை துார்வார வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை உணராமல் அரசு கண்ணாமூச்சி காட்டுவது வேதனை அளிக்கிறது. தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முதல்வர் முன்வர வேண்டும்' என்றனர்.