| ஆபத்து! படியில் பயணம் செய்யும் மாணவர்கள் உயிருக்கு... பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? Dinamalar
ஆபத்து! படியில் பயணம் செய்யும் மாணவர்கள் உயிருக்கு... பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
23:03

கடலுார்:கடலுார் மாவட்டத்தில், போதிய பஸ் வசதியின்றி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடலுார் மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம், வடலுார், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 1,715, மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., என 518 தனியார் பள்ளிகள் என, மொத்தம் 2 ஆயிரத்து 233 பள்ளிகள் உள்ளன.இவற்றில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 775 பேர் உட்பட ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து, கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒரு மாதம் ஆகிவிட்டது. மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், வடலுார், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, நெல்லிக்குப்பம், திட்டக்குடி, வேப்பூர் உட்பட பல நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பஸ், வேன், ஆட்டோ, சைக்கிள் போன்றவற்றில் தான் செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் பஸ்களில் தான் செல்கின்றனர். அதேபோல், கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொது மக்கள் அன்றாட தேவைகளுக்கு பஸ்களில் நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.


இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும்.பஸ்களில் கூட்ட நெரிசல் காரணமாக இடமின்றி படிகளில் தொங்கியப்படி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்யும் நிலை உள்ளது. ஓரிரு அரசு பஸ் டிரைவர்கள் வழியில் மாணவர்களை கண்டால் பஸ்களை அந்தந்த ஸ்டாப்பில் நிறுத்தாமல் சற்று துாரம் தள்ளி நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். பஸ்சிற்காக காத்திருக்கும் மாணவர்களும் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல இதனை விட்டால் வேறு வழியில்லை என அவசர அவசரமாக ஓடிச் சென்று முண்டியடித்து ஏறுகின்றனர்.


அப்போது சிலர் தவறி விழுந்து காயம் அடைவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.இதில், மாணவிகளின் நிலை தான் படுமோசம். அவர்கள் ஓடிச் சென்று பஸ்சில் ஏறுவதற்கு மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, மாணவ, மாணவிகளின் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் கருதி, காலை மற்றும் மாலை நேரங்களில் மாவட்டம் முழுவதும் கூடுதலாக அரசுப் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X