மேட்டுப்பாளையம்:''சிறுமுகை கனரா வங்கியின் ஓராண்டுக்கான மொத்த வணிகம், 200 கோடி ரூபாய். இதில், 104 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என, கோவை மண்டல கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சிந்து கூறினார்.சிறுமுகை கனரா வங்கி சார்பில் விவசாயிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சிறு தொழில் துவங்க கடன் வழங்கும் நிகழ்ச்சி விஜயலட்சுமி பள்ளி கலையரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறுமுகை வங்கி முதன்மை மேலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மேலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். விவசாயம் உள்ளிட்ட பலவகையான கடன்களை வழங்கிய கோவை மண்டல கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சிந்து பேசியதாவது: விவசாயம் செய்ய மழை அவசியம். அது போல பணமும் இருந்தால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். அதனால் மத்திய அரசு குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்குகிறது. மேலும், சிறுதொழில் துவங்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் கடன் வழங்குகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள, 59 கிளைகளிலும் விவசாயிகளுக்கு முன்னுரிமையில் கடன் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு ஒருகோடி ரூபாயுக்கும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், சிறுதொழில் துவங்கவும் மற்றும் இதர கடன்களுக்கு, 1.35 கோடி ரூபாயுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளன. சிறுமுகை கனரா வங்கியின் ஒரு ஆண்டு வணிகம், 200 கோடி ரூபாய். இதில், 104 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு துணைப் பொது மேலாளர் சிந்து பேசினார்.இந்நிகழ்ச்சியில் 'விவசாயம் நாட்டின் முதுகெலும்பு' என்ற தலைப்பில், ரங்கோலி கோலப் போட்டி நடந்தது. மேலும், 100 பேருக்கு ''ரூபே கார்டு'' வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ், கால்நடை டாக்டர் தியாகராஜன், வெங்கட்ராமனன் ஆகியோர் பேசினர். கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.