| பிரசவ செலவுக்கு சேமித்த பணத்தை குளம் சீரமைக்க கொடுத்த தம்பதி Dinamalar
பிரசவ செலவுக்கு சேமித்த பணத்தை குளம் சீரமைக்க கொடுத்த தம்பதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
04:07

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, பிரசவத்துக்கு சேமித்து வைத்திருந்த, 10 ஆயிரம் ரூபாயை, குளத்தை சீரமைக்க கொடுத்த தம்பதியை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில், கிராம இளைஞர்கள் முயற்சியில், பல தரப்பிலும் நிதி பெற்று, குளம், ஆறு, வரத்து வாய்க்கால்கள் சீரமைப்புப் பணி நடந்து வருகிறது.இவர்களிடம், சில நாட்களுக்கு முன், பள்ளிக் குழந்தைகள் இருவர், புதுமண தம்பதி ஆகியோர், குளத்தை சீரமைக்க நிதி வழங்கினர்.கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் உலகநாதன், 38; மாலத்தீவில் பணியாற்றி வருகிறார். தற்போது, விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி உதயா, 28. இவருக்கு, கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 18ம் தேதி இரவு, சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து, உலகநாதன், குளம் சீரமைப்புக் குழுவினரை, இரு நாட்களுக்கு முன், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்தார்.'தனியார் மருத்துவ மனைக்கு சென்று, அறுவை சிகிச்சை செய்து, பிரசவம் நடந்திருந்தால், பல ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்கும். 'ஆனால், செலவு இல்லாமல், என் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதனால், மருத்துவச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த, 10 ஆயிரம் ரூபாயை, குளம் சீரமைக்க தருகிறேன்' எனக் கூறி, வழங்கினார்.


நெகிழ்ந்து போன குளம் சீரமைப்பு குழு இளைஞர்கள், பதிலுக்கு, இரு பலா மரக்கன்றுகளை வழங்கி, 'இந்த மரக்கன்று, இப்போது பிறந்த குழந்தை வளரும் போது, மரமாக வளர்ந்து பலன் கொடுக்கும்' என்றனர்.உலகநாதன் கூறுகையில், ''நீர்நிலைகள் சீரமைப்பு பணிக்கு, ஏற்கனவே, 2,000 ரூபாய் வழங்கிருந்தேன். எனக்கு, இரண்டாவது மகன் பிறந்துள்ளான். என்னால் முடிந்த தொகையான, 10 ஆயிரத்தை, என் சந்ததிகளின் வாழ்வாதாரத்திற்கு போராடும் இளைஞர் மன்றத்திடம் வழங்கினேன்,'' என்றார். உலகநாதனை பாராட்ட, 81244 20008 என்ற எண்ணில் அழைக்கலாம்.


 

Advertisement
மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X