| கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததால் சர்க்கரை ஆலைகள் திணறல்! வறட்சியால் மாற்றுப் பயிருக்கு மாறி வரும் விவசாயிகள் Dinamalar
கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததால் சர்க்கரை ஆலைகள் திணறல்! வறட்சியால் மாற்றுப் பயிருக்கு மாறி வரும் விவசாயிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:33

மாவட்டத்தில் கடும் வறட்சியால் ஆயிரக்கணக்கான பரப்பில் கரும்பு பயிர்கள் கருகியதால் சர்க்கரை ஆலையில் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மாற்றுப் பயிருக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் திணறி வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சர்க்கரை ஆலைகளில் 3 கூட்டுறவு சர்க்கரை ஆலை, 4 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன.


மூங்கில்துறைப்பட்டு, கச்சிராயபாளையம், பெரியசெவலை ஆகிய ஊர்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், முண்டியம்பாக்கம், செஞ்சி அடுத்த செம்மேடு, திருக்கோயிலூர் அடுத்த வேங்கூர், தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் ஆகிய ஊர்களில் தனியார் சர்க்கரை ஆலைகள் அமைந்துள்ளன.தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளின் மொத்த உற்பத்தியில் 20 சதவீத சர்க்கரை உற்பத்தி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலைகளில் இருந்து கிடைக்கிறது.இதன் காரணமாக தமிழகத்தின் சர்க்கரை களஞ்சியம் என விழுப்புரம் மாவட்டம் சிறப்பிடம் பெறுகிறது.மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பு நிலம் கரும்பு சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இங்கு 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.


இதனால் தான் சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து சர்க்கரை உற்பத்தியும் உயர்ந்தது.ஆண்டு பயிராக கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் கிணற்று நீர் பாசனம் கைகொடுத்தால் மட்டுமே ஆண்டுதோறும் நீர்பாய்ச்சி மகசூல் பெருக்க முடியும்.கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றுவதாலும், கோடையில் கடும் வெப்பம் நிலவுவதால் கரும்பு பயிரை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.


இதன் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக குறைந்து 48 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மட்டும் கரும்பு பயிரிடப்பட்டது.இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டது.நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனதால் கிணற்று நீர்ப்பாசனம் கைகொடுக்காமல் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி கருகின.சர்க்கரை ஆலைகளுக்கு பதிவுசெய்த கரும்புகள் பட்டுப் போனதால் ஆலையின் அரவைக்கு தேவையான கரும்பை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி அளவு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் கரும்பு சாகுபடி செய்வதை முற்றிலும் தவிர்த்து, பெரும்பாலான விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.கிடைக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து மாற்றுப் பயிரை சாகுபடி செய்து வருவாய் ஈட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தனியார் ஆலைகளுக்கு வழங்கப்படும் கரும்பிற்கான உரிய விலை குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்கின்ற பிரச்னை தொடர்கதையாக உள்ளது.இதுவரை 130 கோடி ரூபாய் பணம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.தொடர்ந்து அனைத்து வகையிலும் வஞ்சிக்கப்படும் கரும்பு விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு ஆர்வம் காட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


தொடர் வறட்சியால் கரும்பு பயிர்கள் கருகி நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் கரும்பு சாகுபடி பரப்பு மூன்றில் ஒரு பங்காக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் சர்க்கரை ஆலைகளின் அரவை திறனுக்கு தேவையான கரும்பு கிடைக்காமல் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


-- நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X