| திறக்கப்படாத சுகாதார வளாகம்; தினமும் குடிநீருக்கு திண்டாட்டம்; பிரச்னைகளால் பெருமூச்சு விடும் பெருமாள் கோயில் தெரு மக்கள் Dinamalar
திறக்கப்படாத சுகாதார வளாகம்; தினமும் குடிநீருக்கு திண்டாட்டம்; பிரச்னைகளால் பெருமூச்சு விடும் பெருமாள் கோயில் தெரு மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
07:14

விருதுநகர் : செயல்படாத மின்மோட்டாரால் தண்ணீருக்கு திண்டாட்டம், திறக்கப்படாத பொது சுகாதார வளாகத்தால் சுகாதாரகேடு, வாறுகால் வசதியில்லாததால் வீட்டுக்குள் புகுந்து ஓடும் கழிவுநீர் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் பெருமாள் கோயில் தெரு மக்கள்.

விருதுநகர் 20வது வார்டில் அண்ணாமலை தெரு, பெருமாள் கோயில் தெரு, வேலுசந்து, பால் டிப்போ ஆகிய பகுதிகள் உள்ளன. 1,500 மக்கள் வரை வசிக்கின்றனர்.

இப்பகுதியில் மின்மோட்டார் செயல்படாததால் பொதுமக்கள் புழக்கத்திற்கு கூட குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். குடிநீருக்காக பக்கத்து தெருக்கள், மினிலாரிகளை தேடுகின்றனர். 2009 ல் நகராட்சி நிதியில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் தற்போது வரை மூடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் 2 கி.மீ., துாரம் வரை நடந்து சென்று மையநுாலகம் எதிர்ப்புறம் உள்ள கட்டண கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.

முதியவர்கள், நடக்க இயலாதவர்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர். அவர்களது குரலுக்கு நகராட்சி நிர்வாகம் செவிசாய்த்து பெருமாள் கோயில் தெருவில் செயல்படாமல் இருக்கும் சுகாதார வளாகத்தை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இப்பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால். மழைக்காலங்களில் குடிநீர் வீட்டுக்குள் வந்துவிடுகிறது.



குடிநீருக்கு திண்டாட்டம்

புழக்கத்திற்கு கூட தண்ணீர் இல்லை. விலைக்கு வாங்கும் குடிநீர் கூட எங்கள் பகுதிக்குள் அடிக்கடி வருவதில்லை. நடந்து சென்று மேலத்தெரு பகுதிகளில் வரும் மினிலாரிகளில் குடிநீரை விலைக்கு வாங்குகிறோம். நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்.

-காந்திமதி, மூதாட்டி, பெருமாள் கோயில் தெரு.



பள்ளிக்கு செல்ல தாமதம்

பொது சுகாதார வளாகம் இல்லாததால் எங்கள் குழந்தைகளை பிற பகுதியில் இருக்கும் செயல்படும் சுகாதார வளாகங்களுக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலையில் அவர்களை பள்ளிக்கு தயார் செய்து அனுப்புவதற்கு தாமதமாகிறது. நகராட்சி நிர்வாகம் இங்கு வசிக்கும் மக்களுக்கு நியாயமான பதிலை தர வேண்டும்.

-ராஜேஸ்வரி, குடும்பத்தலைவி, பெருமாள் கோயில் தெரு



சுகாதார வளாகத்தை திறங்கள்

வயதான மக்களின் நலனை கருத்தில் கொண்டு அருகில் உள்ள சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும். நகராட்சி ஊழியர்கள் கூட பராமரிக்க வேண்டாம். நாங்களே பராமரித்து கொள்கிறோம். அவசரத்திற்கு நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த அவலம் தொடராமல் இருக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டியம்மாள், மூதாட்டி, பெருமாள் கோயில் தெரு.



2 கி.மீ., நடைபயணம்

இங்குள்ள முதியவர்கள் பெரும்பாலும் 70 வயதை கடந்தவர்கள். அவர்களால் தினசரி 2 கி.மீ., நடந்து சென்று கழிப்பறை சென்று வர இயலாது. இருப்பினும் நகராட்சியின் அலட்சியத்தால் தள்ளாடிய படியே தினமும் மையநுாலகம் அருகே உள்ள கட்டண கழிப்பிடம் வரை சென்று வருகின்றனர்.

-மகேஸ்வரி, மூதாட்டி, பெருமாள் கோயில் தெரு.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X