சேலம்: ''தமிழகம், சாலை உள் கட்டமைப்பு வசதியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில், 24.10 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை, பெரியாம்பட்டி-துட்டம்பட்டி வரை, 3.110 கி.மீ., தூரத்துக்கு ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலையை இணைத்து நிறுவப்பட்டது. கொங்கணாபுரத்தில், வடக்கரை வாய்க்கால்-நரிமேடு சாலை இடையே மேம்பாலம், தொளசம்பட்டியில் மேம்பாலம் என, 5.25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா, தாரமங்கலம் புறவழிச்சாலை சந்திப்பில், நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி, புறவழிச்சாலை, இரு மேம்பாலங்களை திறந்துவைத்தார். பின், கொடியசைத்து, புறவழிச்சாலையில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இந்தியாவில், சாலை உள் கட்டமைப்பு வசதி கொண்ட மாநிலம் என்றால், தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு, நாம் முதலிடத்தில் உள்ளோம். சாலை வசதி இருந்தால் மட்டுமே, தொழில்வளம் சிறப்படையும். மக்கள் முன் வந்து, நிலம் கொடுத்தால்தான், தரமான சாலைகள் அமைக்க முடியும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஓமலூர் - மேட்டூர் இடையே, தொளசம்பட்டியில், 18.44 கோடி ரூபாய் மதிப்பில், ரயில்வே மேம்பாலம்; முத்துநாயக்கன்பட்டியில், 15.94 கோடி ரூபாய் மதிப்பில், ரயில்வே மேம்பாலம்; ஜே.எஸ்.டபுள்யு., தொழிற்சாலை அருகே, 19.34 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம்; குஞ்சாண்டியூரில், ரயில்வே மேம்பாலம் விரைவில் கட்டிமுடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும். திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படவுள்ளது. அதேபோல், ஓமலூர் - மேச்சேரி வரை, 14.6 கி.மீ., சாலையும், நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பவானி - மேட்டூர், மேட்டூர் - தொப்பூர் சாலை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சேலம், இரும்பாலை பகுதியில், ராணுவ தளவாடங்களுக்கு உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை அமையவுள்ளதால், நேரடியாக, மறைமுகமாக, ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைப்பது, ஒரு வரப்பிரசாதம். விவசாய அமைப்புகளிடம், ஏரிகளை ஒப்படைத்து, அவர்களின் பங்களிப்போடு, நீர் மேலாண்மை மேம்படுத்தப்படுகிறது. ஏரி, குளங்களை தூர்வாரி, வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள, விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓமலூர், பனமரத்துப்பட்டி பகுதிகளில், மலர் சாகுபடி அதிகம் நடப்பதால், ஓசூரில், சர்வதேச அளவில் மலர் ஏலமையம் நிறுவப்பட உள்ளது. அங்கு, தரகர்கள் இன்றி விவசாயிகள் - வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ளலாம். 'ஆன்லைன்' மூலம், விளை பொருட்களை விற்கவும், பாதுகாக்கவும், ஓமலூர் -மேச்சேரி சாலையில், விற்பனை மையத்துடன் கூடிய குளிர்பதன கிடங்கு, ஏ.டி.எம்., வசதியுடன் நிறுவப்பட உள்ளது. சென்னை அருகே, 2,000 கோடி ரூபாய் மதிப்பில், உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. கைத்தறி தொழிலாளர்களுக்கு, கூலி உயர்த்தப்பட்டு, விவசாயிகள், தொழிலாளர்களுக்கான அரசாக, தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
'100 ஏரிகளை நிரப்ப திட்டம்': இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இடைப்பாடி நகரிலுள்ள, சரபங்கா நதியின், 5 கி.மீ., தூரத்தை புதுப்பிக்க, நான்கு கோடியே, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை, மேட்டூர், சங்ககிரி, ஓமலூர், இடைப்பாடி சட்டசபை தொகுதி மக்கள் பயன்படுத்த, 565 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 100 ஏரிகளை நிரப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நல்ல சாலை வசதிகள் ஏற்படுத்தும் நோக்கில், திருச்செங்கோடு - ஓமலூர், சேலம் - திருவண்ணாமலை, ஈரோடு -மேட்டூருக்கு, சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில், பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம், மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஓமலூர் - தாரமங்கலம் சாலையில், காய்கறி சந்தை ஏற்படுத்தப்படவுள்ளது. அங்கு காய்கறியை விற்கலாம், விற்காததை, அங்கேயே ஒரு மாதம் வரை, கட்டணமின்றி பாதுகாத்து வைக்கலாம். விவசாயிகள், வியாபாரிகள் தங்க வசதி உள்ளது. நான் விவசாயியாக இருப்பதால், தினமும், அவர்களின் நலனையே நினைத்து, அக்கறையுடன் பாடுபட்டு வருகிறேன். குடிமராமத்து திட்டத்தில், ஏரி, அணைகளில் உள்ள வண்டல் மண் எடுக்கப்பட்டு, விவசாய நிலங்களில் பயன்படுத்தும்போது, பயிர்கள் செழித்து வளர்கின்றன. இதுபோன்ற திட்டங்களால், உணவு பொருட்கள் உற்பத்தியில், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதற்காக, மத்திய அரசின் விருதும் பெற்றுள்ளது. ஆறுகளில், மாசுபட்ட நீர், ஒரு சொட்டு கூட கலக்கக்கூடாது என்ற எண்ணத்தில், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் லோக்சபா எம்.பி., பார்த்திபன், ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜா, செம்மலை, மனோன்மணி, இடைப்பாடி நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி கல்வி, வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் மூலம், 22 ஆயிரத்து, 294 பேருக்கு, 36 கோடியே, 59 லட்சத்து, 88 ஆயிரம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். முடிவுற்ற, 11 கட்டடங்களை திறந்து வைத்தார். இதுதவிர, கொங்கணாபுரம் ஊரக போலீஸ் ஸ்டேஷனுக்கு அடிக்கல் நாட்டி, இடைப்பாடிக்கு, மின்மோட்டார் மூலம் இயங்கும், 18 குப்பை சேகரிப்பு வாகனங்களை இயக்கி வைத்தார்.