இடைப்பாடி: ''அத்தி வரதரை இடமாற்றம் செய்ய, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில், முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி: தமிழகத்தில், நிதி ஆதாரத்தை பெருக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதியை பெற, நடவடிக்கை எடுத்து வருகிறோம். அணை பாதுகாப்பு மசோதா, கடந்த முறை விவாதத்துக்கு வந்தபோதே, அதை எதிர்த்து நிறுத்தி வைத்தோம். இப்போது, அந்த மசோதாவை எதிர்த்து பார்லிமென்ட்டில் அனைத்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் கொடுப்பர். கேரளாவிலுள்ள பல்வேறு அணைகள், தமிழகத்தின் நிர்வாகத்தில் உள்ளன. அதை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்திலுள்ள அத்தி வரதரை பார்க்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்கு, அத்தி வரதரை இடமாற்றம் செய்ய முடியுமா என, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.