மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் நள்ளிரவில் 3 பொக்லைனுக்கு தீ வைப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் நள்ளிரவில் 3 பொக்லைனுக்கு தீ வைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:54

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், வண்டல், செம்மண் தோண்ட நிறுத்தப்பட்டிருந்த, மூன்று பொக்லைன் மர்ம நபர்கள் வைத்த தீயால், எரிந்து நாசமானது.


மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. மொத்தம், 152 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்ட அணை நீர்மட்டம், தற்போது, 39.72 அடியாக உள்ளது. இரு வாரமாக மேட்டூர் அணை மூலக்காடு, பண்ணவாடியிலுள்ள வறண்ட நீர்பரப்பு பகுதியில் விவசாயிகள், மக்கள், தினமும், 100க்கும் மேற்பட்ட டிராக்டர், லாரிகளில் வண்டல், செம்மண்ணை தோண்டி எடுத்து செல்கின்றனர். இதற்காக, மூலக்காடு நீர்பரப்பு பகுதியில், 13 பொக்லைன், பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில், ஒன்பது பொக்லைன் இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, மூலக்காடு நீர்பரப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த ஒரு பொக்லைன், தீப்பற்றி எரிந்தது. மளமளவென பரவிய தீ, அருகில் நின்றிருந்த இரு பொக்லைன் மீது பரவியது. இதையறிந்து சென்ற, மேட்டூர் தீயணைப்பு குழுவினர் தீயை அணைத்தனர். எனினும், அந்தியூர், நத்தமேட்டை சேர்ந்த வளர்மதி; பவானி, நாயக்கனூர் செல்லதுரை; வேலாமருதூர் நாகப்பன் ஆகியோரின், 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய, மூன்று பொக்லைன் இயந்திரங்கள் தீயில் கருகி நாசமாகின. கொளத்தூர் போலீசார், பொக்லைனுக்கு தீ வைத்த மர்மநபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


விவசாயிகள் எச்சரிக்கை? மேட்டூர் அணை, வறண்ட நீர்பரப்பு பகுதியில், சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகளில் சிலர் எள், சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மற்ற விவசாயிகள், சாகுபடி செய்யாதபோதும், நீர்பரப்பு பகுதியிலுள்ள நிலத்தை பிரித்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இரு வாரத்துக்கு முன், அணை நீர்பரப்பு பகுதியில், வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியது. ஆனால், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தில், மண் தோண்டி எடுக்கக்கூடாது என, சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அணை நீர்பரப்பு பகுதி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், மண் தோண்டி எடுப்பதை விவசாயிகளால் தடுக்க முடியவில்லை. இதுதொடர்பாக விவசாயிகள், பொதுப்பணித்துறை இடையே,'லடாய்' நீடித்தது. இச்சூழலில், பொக்லைன் தீப்பற்றி எரிந்தது. இதனால், மண் தோண்டி எடுப்பவர்களுக்கு, விவசாயிகள் மிரட்டல் விடுக்கும் விதமாக தீ வைத்தனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X