| எஸ்.பி., 'சீட்'டில் மந்திரி; பதவியை பறித்தார் முதல்வர்! Dinamalar
எஸ்.பி., 'சீட்'டில் மந்திரி; பதவியை பறித்தார் முதல்வர்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
02:09

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கயல்விழி, திடீரென உளுந்துார்பேட்டை 'பட்டாலியனுக்கு' பந்தாடப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த, 2017ல், திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனராக இருந்த கயல்விழி, அப்போதைய போலீஸ் கமிஷனர் நாகராஜனின் அதிரடி உத்தரவுகளை அமல்படுத்தமுடியாமல், அமைச்சர் ஒருவரின் தயவில், இடமாறுதல் பெற்று, திருப்பூர் ரூரல் எஸ்.பி., ஆனார். மாவட்டத்தில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம், கஞ்சா, கட்டப்பஞ்சாயத்து என, சட்டவிரோத செயல்கள் தலைதுாக்கின. கட்டவிழ்த்துவிடப்பட்டது போல போலீசில் லஞ்சமும், மாமூலும் தலைதுாக்கியது.பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் போலீஸ் ஸ்டேஷன்களில் அதிகரித்தன. உடுமலை, தாராபுரம் பகுதிகளில் ஆளுங்கட்சியினர், போலீஸ் துணையுடனேயே ஆற்றில் மணல் கொள்ளை நடத்தினர். தடுக்க முயன்ற வருவாய ஆய்வாளர் வெட்டப்பட்டார்.திருப்பூர் எஸ்.பி., மீது அதிருப்தியடைந்த உயரதிகாரிகள், தங்களுக்கு வந்த புகார்களின் மீது, வேறுமாவட்ட போலீசாரை திருப்பூர் மாவட்டத்துக்கு அனுப்பி, ரெய்டு நடத்தினர். உடுமலை, மடத்துக்குளத்தில் போலீஸ் உதவியுடன் நடந்த சீட்டாட்டத்தின் போது, ஈரோடு மாவட்ட போலீஸ் 'டீம்' சோதனை நடத்தி கும்பலை கைது செய்து, லட்சக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தனர். இப்படியொரு ரெய்டு நடந்துமுடிந்தபிறகே உள்ளூர், மாவட்ட எஸ்.பி.,க்கும் தகவல் தெரியவந்தது என்றால், எந்த அளவிற்கு ரெய்டு ரகசியமாக நடத்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும்.இந்நிலையில்தான், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கயல்விழி, திடீரென பந்தாடப்பட்டு, அதிகாரமற்ற பதவியாக பலராலும் கருதப்படும் உளுந்துார்பேட்டையிலுள்ள, தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றிய ஒருவர், மீண்டும் வேறு மாவட்டத்துக்கு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டால் அவரது நடவடிக்கையில் அரசு திருப்தி அடைந்திருக்கிறது என்றும், பட்டாலியனுக்கு பந்தாடப்பட்டால் அது 'தண்டனையே' என்றும் கூறுகின்றனர், போலீசார்.மேலும் போலீசார் கூறுகையில், 'ஒரு முறை, அமைச்சர் ஒருவர் திருப்பூர் எஸ்.பி., அலுவலகம் வந்தபோது, தனது இருக்கையிலேயே அமருமாறு கூறி, அமைச்சரை அமரச் செய்தார் எஸ்.பி., கயல்விழி. 'போலீஸ் அலுவலகத்தில் உயரதிகாரி இருக்கையில் அரசியல்வாதி, அது, அமைச்சராக இருப்பினும் அமர்ந்ததும், அமர வைக்கப்பட்டதும் போலீசுக்கு கண்ணியக்குறைவான செயல். இதுகுறித்தும், மாவட்டத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத, சமூக விரோத செயல்கள் குறித்தும் முதல்வருக்கு, உளவுத்துறையின் தரப்பில் இருந்து நேரடி அறிக்கை சென்றதாலேயே, எஸ்.பி., மாற்றப்பட்டுள்ளார்' என்றனர்.புதிய எஸ்.பி., திஷா மிட்டல்திருப்பூர் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள திஷா மிட்டல், நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரி. இதற்கு முன் பெரம்பலுார் எஸ்.பி.,யாக பணியாற்றி உள்ளார். அதற்குமுன், திருப்பூரில் துணைக்கமிஷனராக பணியாற்றியவர். தொழில் மாவட்டமான திருப்பூரில் வெளிமாநிலத்தவர்கள், வெளிமாவட்டத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். மக்கள் பெருக்கம் காரணமாக, குற்றங்களும் அதிகரித்துவிட்டன. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.,யாவது, ஆளுங்கட்சியினரின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தனது கடமையை நேர்மையான முறையில் நிறைவேற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, திருப்பூர் மக்களிடம் வலுத்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X