கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 15 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பெட்டிகளில் தக்காளியை அடுக்கி, தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.தக்காளி வரத்து குறைவால், விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏலம் துவங்கியதில் இருந்து தக்காளிக்கு போட்டி ஏற்படவில்லை. இதனால், தக்காளி பெட்டி ஒன்று அதிகபட்சமாக, 140 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
கடந்த வாரம், அதிகபட்சமாக, 270 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. பெட்டி ஒன்றுக்கு, 130 ரூபாய் விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கமிஷன் மண்டி நிர்வாகிகள் கூறுகையில், ''கடந்த வாரம் மழை காரணமாக, கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்குதக்காளி செல்லவில்லை.கிணத்துக்கடவில் இருந்து, கேரளாவுக்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையும் வந்ததால், தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது, கேரளாவில் மழை குறைந்துள்ளதால், கர்நாடக மாநில தக்காளி கேரளாவுக்கு சென்றுள்ளதால், கிணத்துக்கடவில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது,'' என்றனர்.